கர்நாடகாவில் 7,000 கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி பாதிப்பா?
கர்நாடகாவில் 7,000 மாணவர்களுக்கு எச்.ஐ.வி பாதிப்பு கண்டறியப்பட்டதாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. இருப்பினும், இது உண்மையல்ல என்று கர்நாடக மாநில எய்ட்ஸ் தடுப்பு சங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு, கர்நாடகாவில் சுமார் 7,000 கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. பாதிக்கப்பட்டவர்கள் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்றும், இந்த புள்ளிவிவரங்களை தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) வெளியிட்டுள்ளதாகவும் அந்த செய்திகளில் குறிப்பிட்டிருந்தன. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள கர்நாடக மாநில எய்ட்ஸ் தடுப்பு சங்கம், அந்த செய்திகள் தவறானவை என்று தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது.
அதில் மாணவர்கள் எனத் தனிப் பிரிவாக எச்.ஐ.வி தரவுகள் பராமரிக்கப்படுவதில்லை. 2004-க்குப் பிறகு 18-35 வயதுடையோரில் மொத்தம் 39,000 பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே, 7,000 மாணவர்கள் என்ற தகவல் முற்றிலும் பொய். தவறான வதந்திகளைப் பரப்புவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
2004-ஆம் ஆண்டு முதல் 18-35 வயதுக்குட்பட்டவர்களில் ஒட்டுமொத்தமாக சுமார் 39,000 பேருக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்து கல்லூரிகளில் விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை முகாம்கள் நடத்தப்படும், ஆனால் அனைத்துப் பரிசோதனைகளும் விருப்பத்தின் பேரிலேயே செய்யப்படுகின்றன. 2017-ஆம் ஆண்டின் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் (தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ், எந்தவொரு நபரும் எச்.ஐ.வி பரிசோதனை செய்துகொள்ளும்படி கட்டாயப்படுத்தப்பட முடியாது. இந்தியாவில் எச்.ஐ.வி பாதிப்பு எண்ணிக்கையில் கர்நாடகா மூன்றாவது இடத்தில் உள்ளது. கிட்டத்தட்ட 2.6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சுமார் 54,000 பேருக்கு நோய் கண்டறியப்படாமல் உள்ளது. எச்.ஐ.வி என்பது பாலியல் ரீதியாகப் பரவும் ஒரு நோயாகும். உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகளின்படி, இதுவரை குறைந்தது 44.2 மில்லியன் மக்கள் இதனால் உயிரிழந்துள்ளனர்.