×

'டிராஃபிக் வடா பாவ்'- பீட்சா டெலிவரி பாயின் வாழ்வை மாற்றிய டிராபிக்

 

மும்பையின் போக்குவரத்து நெரிசலில் இருந்து ஒரு தொழிலை உருவாக்கிய பீட்சா டெலிவரி பாய்க்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன.


போக்குவரத்து நெரிசலில் ஏற்படும் பசி நம்மில் பலருக்கு கோபத்தையோ அல்லது எரிச்சலையோ ஏற்படுத்தும். ஆனால் கௌரவ் லோந்தேவைப் பொறுத்தவரை, அதுவே ஒரு தொழிலின் அடித்தளமாக அமைந்துள்ளது. தானே மற்றும் அந்தேரிக்கு இடையே பயணம் செய்யும் பெரும்பாலான மக்களுக்கு, மாலை நேரப் போக்குவரத்து நெரிசல் என்பது ஒரு பெரிய தலைவலி. ஜன்னல்களை மூடியபடி, வயிறு உறும, அசையவே இல்லாதது போல் தோன்றும் பிரேக் விளக்குகளையே பார்த்தபடி வாகனங்கள் எறும்பு வேகத்தில் நகரும். 

2009-ஆம் ஆண்டு கௌரவ் லோந்தே பீட்சா டெலிவரி செய்பவராக பணியாற்றிவந்தார். ஒவ்வொரு இரவும் தானேவில் உள்ள தனது வீட்டிற்குச் செல்வதற்கு முன்பு, அவர் அந்தேரியைக் கடந்து பயணம் செய்வார். அந்தத் தூரம் 24 கிலோமீட்டர் தான். ஆனால் போக்குவரத்து நெரிசல் காரணமாக அரை மணிநேரத்தில் செல்லவேண்டிய தனது வீட்டிற்கு மூன்று மணி நேரம் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஒவ்வொரு மாலையும், சாப்பிடுவதற்கு எதுவும் இல்லாமல், பசியுடன் அந்த நெரிசலில் அவர் காத்திருந்தார். ஒரு நாள் மாலை, நெரிசல் மிகுந்த கார்களுக்கு இடையே வேர்க்கடலை விற்பவர் ஒருவர் புகுந்து சென்றார். லோந்தே வாங்கிய அந்தச் சிறிய தின்பண்டம், உடனடியாக அவனது மனநிலையை மாற்றியது. ஒவ்வொரு மாலையும் நகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு, நன்கு தயாரிக்கப்பட்ட ஒரு சரியான உணவை விற்கலாமே என நினைத்தார்.

An inspiring startup story…. pic.twitter.com/0XGTrksy7M

— Harsh Goenka (@hvgoenka) June 8, 2026


2019-ஆம் ஆண்டின் மத்தியில், தனது வேலையை விட்ட லோந்தே,தனது தாயிடம் ரூ.1 லட்சம் வாங்கி தொழிலை தொடங்கினார். அவரது மனைவி வீட்டில் வடா பாவ் தயாரித்து கொடுக்க அதனை வீதியில் விற்க தொடங்கினார் லோந்தே... அவர் விற்கும் உணவுக்கும் 'டிராஃபிக் வடா பாவ்' என பெயரிட்டார். ஒவ்வொரு வடா பாவும் ஒரு சிறிய தண்ணீர் பாட்டில் மற்றும் ஒரு டிஷ்யூ பேப்பருடன், நேர்த்தியான பெட்டியில் அடைத்து, வெறும் 20 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால் முதலில் அதனை வாங்க பலரும் தயங்கினர். அதனால் மக்களின் மனதில் இடம்பெற நாளொன்றுக்கு 50 வடா பாவ் என  5 நாட்களுக்கு இலவசமாக கொடுத்தார். இரண்டாவது வாரத்திலேயே,  மக்கள் அதை ஆர்வத்துடன் கேட்கத் தொடங்கினர். ஆரஞ்சு நிற டீ.சர்ட் உடையுடன் கூடிய தனது 9 பணியாளர்களை ஒவ்வொரு போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளிலும் லோந்தே களமிறக்கினார். மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலான நேரத்தில் தினமும் சுமார் 800 வடா பாவ்கள் விற்கப்படும். இதன்மூலம் லோந்தே, மாதந்தோறும் ஏறத்தாழ 2 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுகிறார்.