×

உருமாற்றம் அடைந்த H3N2 வைரஸ் - அதிவேகத்தில் பரவும் என நிபுணர்கள் எச்சரிக்கை

 

இந்தியா முழுவதும் பரவி வரும் H3N2 வகை வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளதால், அதன் பரவும் வேகம் அதிகரிக்கும் எனவும், இதனால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயரக்கூடும் எனவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும்  H3N2 இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் அதிவேகமாக பரவி வருகிறது. வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதனிடையே இந்த வைரஸ் காய்ச்சலால் கர்நாடகா மற்றும் ஹரியாணாவில் தலா ஒருவர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் நாடு முழுவதும் இந்த காய்ச்சலுக்கு 90க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  H3N2 வைரஸ் குறித்த அதிர்ச்சி தரும் தகவலை மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

H3N2 வைரஸ் குறிப்பிடத்தக்க மருத்துவப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக கடுமையான நுரையீரல் தொற்றுகளை ஏற்படுத்துவதாகவும், இதனால் வைரஸைப் பற்றிய கவலை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.  இந்த வைரஸ் ஆறு மாதங்களில் எதிர்பாராதவிதமாக அதன் வடிவத்தை மாற்றிவிட்டது என தெரிவித்துள்ளனர். தற்போது, ​​H3N2 நோயின் தீவிரம் பருவகால காய்ச்சலுடன் ஒப்பிடத்தக்கது என தெரிவித்துள்ளது. 
H3N2 வைரஸ்  "ஸ்வைன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்" என்று குறிப்பிடப்படுகிறது. இது பொதுவாக பன்றிகளை பாதிக்கிறது எனவும்,  இந்த வைரஸ்கள் மக்களைப் பாதிக்கும்போது "மாறுபட்ட" வைரஸ்கள் என்று அழைக்கப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளனர்.  H3N2 மாறுபாடு வைரஸ் முதல் முதலில் 2011இல் மக்களில் கண்டறியப்பட்டது என்றும், இந்த வைரஸ் 2009ம் ஆண்டு பரவிய H1N1 தொற்றுநோய் வைரஸின் மரபணு மற்றும் பறவைகள், பன்றிகள் மற்றும் மனித வைரஸ்களின் மரபணுக்களைக் கொண்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.