×

பெருகும் கொரோனா.. குஜராத்தில் இன்று முதல் மேலும் 9 நகரங்களில் இரவு ஊரடங்கு… பா.ஜக. அரசு அதிரடி நடவடிக்கை

குஜராத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், இன்று முதல் மேலும் 9 நகரங்களில் இரவு ஊரடங்கை அம்மாநில அரசு அமல்படுத்துகிறது. நம் நாட்டில் கொரோனா வைரஸின் 2வது அலை தீவிரமாக உள்ளது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனையடுத்து கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பொருளாதாரத்தை பாதிக்காத வகையில் கட்டுப்பாடுகள், இரவு ஊரடங்கு, வார இறுதி நாட்கள் முழு ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. குஜராத்தில்
 

குஜராத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், இன்று முதல் மேலும் 9 நகரங்களில் இரவு ஊரடங்கை அம்மாநில அரசு அமல்படுத்துகிறது.

நம் நாட்டில் கொரோனா வைரஸின் 2வது அலை தீவிரமாக உள்ளது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனையடுத்து கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பொருளாதாரத்தை பாதிக்காத வகையில் கட்டுப்பாடுகள், இரவு ஊரடங்கு, வார இறுதி நாட்கள் முழு ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

விஜய் ரூபானி

குஜராத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான பா.ஜ.க. அரசு இந்த மாத தொடக்கத்தில் சூரத் உள்பட 20 நகரங்களில் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கை அமல்படுத்தியது. மேலும் பல கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த சூழ்நிலையில் குஜராத்தின் வேறு சில நகரங்களிலும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில், ஹிம்மத்நகர், நவ்சாரி, வேராவல், வல்சாத், போர்பந்தர், பொட்டாட், விராம்காம், சோட்டாடேபூர் மற்றும் பழன்பூர் ஆகிய 9 நகரங்களில் இன்று முதல் மே 5ம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது.

உணவகம்

இந்த 29 நகரங்களில் இரவு ஊரடங்கு தவிர பல புதிய கட்டுப்பாடுகளையும் அம்மாநில அரசு விதித்துள்ளது. அதேசமயம் கட்டுப்பாடுகள் நேரத்திலும் இந்த நகரங்களில் அத்தியாவசிய சேவைகள் தொடரும். பலசரக்கு, காய்கறி, பழம், மருந்து, பால் மற்றும் பேக்கரிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நகரங்களில் தொழிற்சாலைகள், உற்பத்தி ஆலைகள், ஆலைகள் மற்றும் கட்டுமான பணிகள் இந்த நகரங்களில் தொடரும். உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் தொடரலாம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.