×

"பாக். போர் விமானம் மீது துல்லிய தாக்குதல்" - "கேப்டன்" அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது!

 

2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை எவராலும் மறுக்க முடியாது. இந்தத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் படை வீரர்கள் 40 பேர் வீரமரணமடைந்தனர். இதற்கு ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக பிப்ரவரி 26ஆம் தேதி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத முகாம் மீது இந்திய விமானப்படை குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. 

பாலக்கோடு தாக்குதல் என அறியப்படும் இந்தத் தாக்குதலில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அப்போது பாகிஸ்தான் எல்லைக்குள் சென்ற இந்திய ராணுவ விமானத்தை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அந்த விமானத்தில் இருந்த இந்திய விமானி அபிநந்தன் பாராசூட் மூலம் தப்பிய நிலையில் எதிர்பாராத விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தார். இதற்குப் பின் பாகிஸ்தான் ராணுவம் அவரைச் சிறைப்பிடித்தது. 

இந்தியா மற்றும் மற்ற உலக நாடுகளின் கடும் அழுத்தத்திற்குப் பின் அபிநந்தனை நல்லெண்ண அடிப்படையில் எவ்வித நிபந்தனையுமின்றி விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார். மார்ச் 1ஆம் தேதி இந்தியாவிற்கு அவர் திரும்பினார். தமிழ்நாட்டைச் சேர்ந்த அபிநந்தன் இந்திய விமானப்படையில் விங் கமாண்டராக பணியாற்றி வந்தார். அவரின் வீரத்தைப் பாராட்டி வீர் சக்ரா விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல கமாண்டர் அபிநந்தன் கேப்டனாகவும் பணி உயர்வு பெறவிருக்கிறார்.

அதன்படி இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அபிநந்தனுக்கு இன்று வீர் சக்ரா விருது வழங்கி கௌரவிக்க இருக்கிறார். இது இந்திய ராணுவத்தின் மூன்றாம் உயரிய விருதாகும். வீரர்களின் வீர சாகசத்தையும் தன்னலமற்ற தியாகத்தையும் பாராட்டி வழங்கக்கூடிய விருது. பாலக்கோடு தாக்குதலின்போது பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக அபிநந்தன் இடம்பெற்றுள்ள விமானப்படையின் 51ஆவது படைப்பிரிவை பாராட்டி ஏற்கெனவே குழு விருது வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.