×

ஸ்லீப்பர் பேருந்தில் 16 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை- ஓட்டுநர், நடத்துனர் கைது

 

தலைநகர் டெல்லி அருகே ஓடும் பேருந்தில் 16 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கைது செய்யப்பட்டனர்.

டெல்லியின் காஷ்மீர் கேட் பகுதியில், 11-ஆம் வகுப்பு பயிலும் 16 வயது மாணவி ஒருவர் ஸ்லீப்பர் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஓட்டுநர் மற்றும் நடத்துநரை போலீசார் கைது செய்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. உத்தரப் பிரதேசத்திலிருந்து நொய்டாவில் உள்ள தனது உறவினரைச் சந்திக்கச் சென்ற அந்தச் சிறுமி, கனமழையின் போது தவறுதலாக பரி சௌக்கில் இறங்கியபோது, ​​ஆகஸ்ட் 4-ஆம் தேதி இரவு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

காலியான அந்த ஸ்லீப்பர் பேருந்தை அவர் சைகை காட்டி நிறுத்த, ஓட்டுநர் குல்தீப் மற்றும் நடத்துநர் சந்தீப் ஆகியோர் அவருக்கு லிஃப்ட் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. வழித்தவறிய சிறுமிக்கு உதவுவதுபோல் நடித்து, பேருந்தில் ஏற்றி ஓட்டுநரும், நடத்துனரும் அத்துமீறியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள், காஷ்மீர் கேட் அருகே சிறுமியை விட்டுச் செல்வதற்கு முன்பு, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. 47 கி.மீ. தூர பயணத்தில் சிறுமிக்கு இருவராலும் மாறிமாறி கூட்டு பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். தடயவியல் பரிசோதனைக்காக அந்தப் பேருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.