×

"உயர் சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு... ரூ.8 லட்சம் வருமான வரம்பில் மாற்றமில்லை" - அரசு திட்டவட்டம்!

 

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு மத்திய அமைச்சரவை முழு ஒப்புதல் அளித்தது. இதற்காக சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதாவாக நிறைவேறி, திருத்தமும் செய்யப்பட்டது. ஆனால் இது பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்டது. அதற்குக் காரணம் உயர் சாதி ஏழைகளுக்காக மத்திய அரசு கூறிய வரம்புகள் தான். 

மத்திய அரசால் ஏழைகள் எனக் குறிப்பிடப்படுபவர்களின் ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்கு குறைவாக உள்ளவர்கள். 5 ஏக்கர் விவசாய நிலமும் 1,000 சதுர அடிக்கு குறைவான வீடு அல்லது பிளாட்டை கொண்டவர்கள் அல்லது நகராட்சி பகுதிகளில் 100/200 சதுர யார்டு குடியிருப்பு இல்லாதவர்களுக்கு இந்த இடஒதுக்கீடு செல்லும் எனக் கூறியது. அதேபோல பொருளாதார அடிப்படையில் இதுவரை இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதில்லை. அரசியலமைப்புச் சட்டத்திலும் அது இல்லை. இதனை எப்படி செயல்படுத்தலாம் எனவும் எதிர்ப்பு எழுந்தது. இது ஒருபுறமிருக்க இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மண்டல் குழு பரிந்துரைகளின் படி 27% இடஒதுக்கீடு வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

ஆனால் இந்த இடஒதுக்கீடு அமல்படுத்தப்படவில்லை. இதற்கு எதிராக தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் சட்டப் போராட்டம் நடத்தின. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின் மத்திய அரசு அமல்படுத்தியது. இருப்பினும் இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்தும் 10% உயர் சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுக்கள் கடந்த முறை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சந்திரசூட், விக்ரம் நாத், நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

உயர் சாதி ஏழைகளுக்கு வருமான உச்ச வரம்பாக ரூ. 8 லட்சம் எப்படி நிர்ணயிக்கப்பட்டது எனவும் அதற்காக என்ன ஆய்வுகளை மத்திய அரசு மேற்கொண்டது என்றும் கேட்டனர். அதேபோல மத்திய அரசு தரப்பில் சினோ கமிட்டி அடிப்படையில் தான் 10% இடஒதுக்கீடு வழங்க முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை அந்த சினோ கமிட்டி அறிக்கையை பார்த்ததே இல்லையே. அந்த அறிக்கையை ஏன் தாக்கல் செய்யவில்லை என்றும் நீதிபதிகள்  கேள்விகளை எழுப்பினார்கள். இதையொட்டி நீட் பிஜி கவுன்சிலிங்கையும் நிறுத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையடுத்து 10% இடஒதுக்கீடு குறித்து ஆராய மூன்று நபர்கள் கொண்ட ஸ்பெஷல் குழு மத்திய அரசு உருவாக்கியது. அந்தக் குழு ஆய்வுசெய்து அறிக்கையைச் சமர்பித்திருக்கிறது. அதனை மத்திய அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், ரூ.8 லட்சம் என்ற நிபந்தனையில் மாற்றமில்லை எனவும் அதே வரம்பு தான் தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ.8 லட்சத்துக்கும் குறைவான ஆண்டு வருமானம் கொண்டவர்கள் இந்த இடஒதுக்கீட்டின் கீழ் பயன்பெற முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. குடியிருப்பு வீட்டை வைத்திருப்பது என்பது ஒருவரது பொருளாதார நிலையை சரியாகப் பிரதிபலிக்காது என்பதால் அதனை அகற்ற வலியுறுத்தியுள்ளது.