×

அடுத்த முப்படை தலைமை தளபதி யார்?... ரேஸில் முந்துவது இவரா? அவரா? - மத்திய அரசின் மனதில் யார்?

 

இந்திய ராணுவத்தின் தலைவராக விளங்கியவர் பிபின் ராவத். முப்படைகளுக்கும் இவர் தான் தலைமை தளபதியாக இருந்தார். இவர் ஏற்கெனவே இந்திய ராணுவ தலைமை தளபதியாக இருந்திருக்கிறார். 2019ஆம் ஆண்டு பணி ஓய்வுபெற்ற பிபின் ராவத், முப்படை தலைமை தளபதியாக மத்திய அரசால் நியமிக்கப்பட்டார். 2020ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது அவருக்கு வயது 62. 65 வயது வரை முப்படை தளபதியாக பணிசெய்ய முடியும். அதன்படி 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஓய்வுபெறவிருந்தார்.

இச்சூழலில் இவர் இன்று தனது மனைவியுடன் நீலகிரியிலுள்ள வெலிங்டன் ராணுவ கல்லூரிக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார். அதன்படி அவருடன், தனி பாதுகாவலர் சாய் தேஜ், பாதுகாப்பு கமாண்டோக்கள், விமான ஓட்டிகள் உள்ளிட்ட அதிகாரிகள் என மொத்தமாக 14 பேர் பயணித்தர். இந்த ஹெலிகாப்டர் இலக்கை அடைய 7 நிமிடத்திற்கு முன்பாகவே விபத்துக்குள்ளானது. இதில் ஒருவரை தவிர 13 பேர் உடல் கருகி உயிரிழந்துவிட்டனர். விமானப்படை குரூப் கேப்டன் வருண் சிங் மட்டுமே 45% காயங்களுடன் உயிர் பிழைத்தார்.

பிபின் ராவத் மிகப்பெரிய வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளார் என்று சொன்னால் அது மிகையாகாது. அடுத்த தளபதியாக யாரை நியமிக்கலாம் என்பதில் அரசுக்குக் கடும் அழுத்தம் எழுந்துள்ளது. நேற்று பிரதமர் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தில் கூட இதற்கான முடிவு எட்டப்படவில்லை. எனினும் இன்னும் 1 வாரத்திற்குள் நியமனம் செய்யப்படலாம். அவ்வாறு செய்யும்போது ராணுவத்தின் மூத்த அதிகாரி யாரோ அவர் தான் தலைமை தளபதியாக நியமிக்கப்படுவார் அல்லது ராணுவம் சார்ந்த துறையில் அனுபவம் வாய்ந்த செயலர் அந்தஸ்தில் இருப்பவர்கள் நியமிக்கப்படலாம்.

அந்த வகையில் இந்திய ராணுவ தலைமை தளபதியாக இருக்கும் எம்.எம்.நரவணே தான் மத்திய அரசின் குட்புக்கில் இருக்கிறார். அவர் தான் அடுத்த முப்படை தலைமை தளபதியாக நியமிக்கலாம் என சொல்லப்படுகிறது. இதனிடையே ராணுவ துணை தளபதி சாண்டி பிரசாத் கத்தார் பயணத்தை ரத்துசெய்து நாடு திரும்பியுள்ளார். இது ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. ஒருவேளை நரவனே முப்படை தளபதியாக நியமிக்கப்பட்டால், சாண்டி பிரசாத் அவர் இடத்தை நிரப்புவார் எனக் கூறப்படுகிறது. 

இவர் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி நாட்டின் 27-வது ராணுவ தளபதியாக பொறுப்பேற்றார். இவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் விமானப் படை தளபதியாக பணியாற்றி ஓய்வுபெற்ற ஆர்கேஎஸ் பதௌரியா. இவர் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி தான் ஓய்வுபெற்றார். இவரும் மத்திய அரசின் கவனத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. 1980ஆம் ஆண்டு விமானப் படையில் சேர்ந்த பதௌரியா, 42 ஆண்டுகள் சேவையாற்றியுள்ளார்.