×

பெப்சி, ரெட் புல்லில் ‘ENERGY DRINK' என இருக்கக்கூடாது- FSSAI அதிரடி உத்தரவு

 

பெப்சி, ரெட் புல் உள்ளிட்ட நிறுவனங்களின் குளிர்பானத்தில் ‘ENERGY DRINK' என்ற வார்த்தையை 90 நாட்களுக்குள் நீக்க இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) உத்தரவு பிறப்பித்துள்ளது.


பெப்சி, ரெட் புல், மான்ஸ்டர் பெவரேஜ், ரிலையன்ஸ் மற்றும் ஹெல் எனர்ஜி உள்ளிட்ட குளிர்பானங்களின் லேபிள்களில் 'எனர்ஜி டிரிங்க்' என்ற சொல்லைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு இந்திய உணவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. அந்த பானங்களில் அதிகளவு காஃபின் இருப்பதாகவும், 90 நாட்களுக்குள் 'எனர்ஜி டிரிங்க்' என்ற சொல்லை நீக்க வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளது. 

கடந்த சில ஆண்டுகளாக எனர்ஜி டிரிங்க் என பெயரிடப்பட்ட பானங்கள் அதிகளவில் விற்பனையாகிறது. குறிப்பாக 2017-ஆம் ஆண்டு பெப்சி நிறுவனம் 'ஸ்டிங்' பானத்தை அறிமுகப்படுத்திய பிறகு, இந்தியாவில் எனர்ஜி டிரிங்க் என பெயரிடப்பட்ட குளிர்பானங்கள் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானது. இதற்கு இந்த வகை பானங்கள் விலை மலிவு  என்பதே காரணம் என FSSAI கூறுகிறது. 2018 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளிடையே இந்த பானங்களின் விற்பனை அளவு இருமடங்காக அதிகரித்துள்ளது.