பைக் எஞ்சினில் இருந்து வந்த புகை தாக்கி- ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
ஆந்திராவில் இரு சக்கர வாகனத்தில் இருந்து வந்த கார்பன் மோனாக்சைடை சுவாசித்து ஒரு வீட்டில் இருந்த நான்கு பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் புங்கனூரில் தியாகராஜு தெருவை சேர்ந்த முரளி தனது இருச்சக்கர வாகனத்தின் இன்ஜின் போர்போனதால் மெக்கானிக் மூலம் இன்ஜின் போர் சரி செய்து வீட்டிற்கு கொண்டு வந்தார். இரவு முழுவதும் இரு சக்கர வாகனத்தை ஆன் செய்து வைக்கும்படி மெக்கானிக் கூறியதால் முரளி வீட்டின் கீழ் தளத்தில் வண்டியை ஆன் செய்து விட்டு முரளியும் அவரது மனைவியும் முதல் தளத்தில் இருந்து அறைக்கு சென்று படுத்து தூங்கினார். கீழ் வீட்டில் முரளி தந்தை ராமச்சந்திரா (75) அவரது மகன் கார்த்திக் (15), இரட்டை குழந்தைகளான சந்தன (7), சரிதா (7) தூங்கினர். இரவு முழுவதும் இருச்சக்கர வாகனம் ஆன் செய்து இருந்ததோடு ஜன்னல் இல்லாததால் இரு சக்கர வாகனத்தில் இருந்து வந்த கார்பன் மோனாக்சைடு காரணமாக வீட்டில் தூங்கி கொண்டுருந்த முரளி தந்தை மகன், மகள்கள் என நான்கு பேரும் இறந்தனர்.
காலை எழுந்தவுடன் முரளி வீட்டின் கீழ் வந்து பார்த்தபோது கதவு தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அனைவரும் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் புங்கனூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுப்பராயுடு தலைமையில் வந்து சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார் .