×

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

 

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா (72). கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த மாணவர் போராட்டத்தில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவுக்கு தப்பி வந்தார். தற்போது நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு வங்கதேசத்தில் ஆட்சியில் உள்ளது. வங்கதேசத்திற்கு 2026ம் ஆண்டு பிப்ரவரியில் பொதுத்தேர்தலை நடத்திட தேர்தல் கமிஷன் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பதவி இழந்து நாட்டைவிட்டு வெளியேறி ஷேக் ஹசீனா மீது ஏராளமான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் ஷேக் ஹசீனா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் வாக்களிக்க தடைவிதித்தும், தேசிய அடையாள அட்டை முடக்கி வைத்தும் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை கைது செய்ய சர்வதேச குற்றத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. 

இந்நிலையில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 2024இல் நடந்த வன்முறையின்போது 1,400 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 22,000 பேர் காயமடைந்துள்ளனர், ஷேக் ஹசினா செய்தது மனித குலத்திற்கே எதிரான குற்றம் என நீதிபதி கருத்து கூறியுள்ளார். ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் மனித உரிமை மீறல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. தீர்ப்பு குறித்து கருத்து கூறியுள்ள ஷேக் ஹசினா, சர்வதேச குற்றவியல் கோர்ட்டால் மரணத்தண்டனை அறிவிக்கப்பட்டிருப்பது அரசியல் ரீதியான பாரபட்டசமானது. எனக்கு எதிரான எந்த உண்மையான ஆதாரமும் இல்லை என தெரிவித்துள்ளார்.