×

இந்தியா வரும் பயணிகளுக்கு 7 நாட்கள் வீட்டு தனிமை கட்டாயம்!
 

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு, ஒமிக்ரான் தொற்று வேகம் எடுக்கத் தொடங்கி விட்டது. இதனால் தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. கிட்டத்தட்ட ஏழு மாதங்களுக்குப் பிறகு கொரோனா  தினசரி பாதிப்பு ஒன்றரை லட்சத்தை நெருங்கியுள்ளது. இது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது. அதேபோல் ஒமிக்ரான்  பாதிப்பு 3,071 ஆக இந்தியாவில் அதிகரித்துள்ளது. 27 மாநிலங்களில் தொற்றுப் பரவியுள்ள நிலையில் இரவு நேர ஊரடங்கு, கல்வி நிறுவனங்கள் மூடல் எனமாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இந்நிலையில் விமான பயணிகளுக்கான புதிய வழிகாட்டு  நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஒமிக்ரான்  பரவல் அதிகமாக காணப்படும் ஹை ரிஸ்க் பட்டியலில் ஒன்பது நாடுகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 19 நாடுகளில் இருந்து பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.அதன்படி வெளிநாடுகளில் இருந்து அனைத்து பயணிகளும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும். அத்துடன்  7 நாட்கள் வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டியது கட்டாயம். நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருந்தாலும் 7 நாட்களும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு கொரோனா  உறுதியாகும் பட்சத்தில் தனிமைப்படுத்துதல் மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுவர்.  அத்துடன் சம்பந்தப்பட்டவரின் ஸ்வாப்  மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்படும் . 

சம்பந்தப்பட்ட பயணிக்கு நெகட்டிவ் என சோதனை பரிசோதனை முடிவில் வந்தாலும் அவர்கள் ஏழு நாட்கள் உடல் நிலையை கண்காணிக்க வேண்டும். உடல் நலம் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.  அதே வேளையில் ரிஸ்க் இல்லாத நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளில் தோராயமாக இருவர் தேர்வு செய்யப்பட்டு  பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.