25 வயதில் எம்எல்ஏ ஆகிறார் நாட்டுப்புற பாடகி
பீகாரின் அலி நகர் தொகுதி பாஜக வேட்பாளராக களம் கண்ட நாட்டுப்புற பாடகி மைதிலி, RJD வேட்பாளரை தோற்கடித்து எம்.எல்.ஏவாகிறார்.
தேர்தலை ஒட்டி பாஜகவில் இணைந்த நாட்டுப்புற பாடகி மைதிலி, அலிநகர் தொகுதியில் போட்டியிட்டார். இவர் தேர்தலில் 46,680 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆர்ஜேடி வேட்பாளர் பினோத் மிஸ்ராவை தோற்கடித்தார். மைதிலி, பினோத் மிஸ்ராவை விட கூடுதலாக 7,309 வாக்குகள் பெற்றுள்ளார். இதன்மூலம் இளம்வயதில் 25 வயதில் எம்எல்ஏ ஆகும் நாட்டுப்புற பாடகி என்ற பெருமையை மைதிலி பெற்றுள்ளார்.
மைதிலி தாக்கூர், வடக்கு பீகாரில் உள்ள மதுபனி மாவட்டத்தின் பெனிபட்டியைச் சேர்ந்தவர். ஆரம்பகால பள்ளிப்படிப்புக்குப் பிறகு, அவரது குடும்பம், மைதிலி தாக்கூரின் இசைப் பயிற்சிக்காக டெல்லிக்கு குடிபெயர்ந்தது. துவாரகாவில் உள்ள பால் பவன் சர்வதேச பள்ளியில் கல்வியைத் தொடர்ந்த மைதில் தாக்கூர், டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள ஆத்ம ராம் சனாதன் தர்ம கல்லூரியில் (ARSD கல்லூரி) இசைப் பயிற்சியை முடித்தார். அதைத் தொடர்ந்து தனது சகோதரர்களான ரிஷவ் மற்றும் அயாச்சியுடன் இணைந்து, போஜ்புரி நாட்டுப்புற நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இவர் பீகாரின் சங்கீத நாடக அகாடமியின் உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
இதுதொடர்பாக இளம் பாடகி மைதிலி தாகூர் அளித்த பேட்டியில், “இது என்னுடைய வெற்றி மட்டுமல்ல, பிகார் மக்களுடைய வெற்றி. பெண்களுக்கு நிதீஷ் செய்த நலத்திட்டங்கள் எனது பயணத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. பிகார் மக்கள் மோடியை நேசிக்கிறார்கள், NDA-வை விரும்புகிறார்கள். அலிநகர் கண்டிப்பாக சீதை நகராக மாறும்” எனக் கூறியுள்ளார்.