×

டிரம்ப்பை கொரோனாவிலிருந்து காப்பாற்றிய புதிய ட்ரீட்மென்ட்… குணமடைந்த முதல் இந்தியர்!

கொரோனா வைரஸ் வந்து ஒன்றரை ஆண்டுகள் நிறைவடைந்தாலும் மருத்துவ உலகிற்கு இன்னமும் புரியாத புதிராகவே இருக்கிறது. முதல் அலையில் இளைஞர்களைத் தாக்காமல் இருந்த கொரோனா இரண்டாம் அலையில் வளைத்து வளைத்து அவர்களையே தாக்குகிறது. பெண்களை விட ஆண்கள் தான் அதிகமாக உயிரிழக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தால் சத்தமே இல்லாமல் இளம்பெண்களை உயிரிழக்க செய்கிறது. அதேபோல இணை நோய்கள் உள்ளவர்களை மரணிக்க வைக்கிறது என்றால், அப்படி இல்லாத இளைஞர்களையும் கொன்று குவித்தது. இதற்கு நடுவே அதன் உருமாற்றம் வேறு.
 

கொரோனா வைரஸ் வந்து ஒன்றரை ஆண்டுகள் நிறைவடைந்தாலும் மருத்துவ உலகிற்கு இன்னமும் புரியாத புதிராகவே இருக்கிறது. முதல் அலையில் இளைஞர்களைத் தாக்காமல் இருந்த கொரோனா இரண்டாம் அலையில் வளைத்து வளைத்து அவர்களையே தாக்குகிறது. பெண்களை விட ஆண்கள் தான் அதிகமாக உயிரிழக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தால் சத்தமே இல்லாமல் இளம்பெண்களை உயிரிழக்க செய்கிறது. அதேபோல இணை நோய்கள் உள்ளவர்களை மரணிக்க வைக்கிறது என்றால், அப்படி இல்லாத இளைஞர்களையும் கொன்று குவித்தது. இதற்கு நடுவே அதன் உருமாற்றம் வேறு. மருத்துவ துறையினருக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.

கொரோனாவை ஆரம்பக்கட்டத்திலேயே குணப்படுத்த பல்வேறு சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இச்சூழலில் புதிய வகை சிகிச்சை முறை ஒன்றால் பல இணை நோய்களுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 84 வயது முதியவர் ஒருவரைக் குணப்படுத்தியிருக்கிறார்கள் மெதாந்தா மருத்துவமனை மருத்துவர்கள். இரு வகை ஆன்டிபாடிகளின் கலவையை அந்த நோயாளிக்குச் செலுத்தி வெற்றிகண்டிருக்கிறார்கள். இது காக்டெய்ல் (Covid Drug Cocktail) சிகிச்சை முறை என்றழைக்கப்படுக்கிறது. இந்தியாவில் இந்தச் சிகிச்சை முறையைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ஹரியானாவைச் சேர்ந்த மொஹபாத் சிங் பெற்றிருக்கிறார்.

அதில் அவர் குணமடைந்திருப்பதே கவனத்துக்குரியது. இந்தச் சிகிச்சையானது கடந்தாண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்பிற்கு வழங்கப்பட்டிருந்தது. இதனால் அவருக்கு ஆரம்பத்திலேயே கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது. இது புதிய சிகிச்சை முறை இல்லையென்றாலும் கொரோனாவிற்கு எதிராக புதியது தான். இதற்கு முன்னதாக புற்றுநோய்க்கு இம்முறை செயல்படுத்தப்பட்டது. காசிரிவிமாப், இம்தேவிமாப் (Casirivimab, Imdevimab) என்ற இரு ஆன்டிபாடிகளின் கலவை தான் காக்டெய்ல் எனப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை சுமார் 60 ஆயிரம் ரூபாய்.

இந்தச் சிகிச்சை முறை யாருக்கு கொடுக்க வேண்டும், எப்போது கொடுக்க வேண்டும் என்பது பற்றி விளக்குகிறார் மெதாந்தா மருத்துவமனை தலைவர் நரேஷ் ட்ரேஹான். “இந்த காக்டெய்ட் ஆன்டிபாடிகளை கொரோனா தொற்றின் ஆரம்பத்திலேயே நோயாளியின் உடலில் செலுத்த வேண்டும். அப்படி செலுத்தும் பட்சத்தில் கொரோனா வைரஸ்கள் அதிகமாக உருவாகி நோயாளியின் உயிரணுக்களுக்குள் நுழைவதைத் தடுக்க முடியும். இதனால் பெருமளவு கொரோனா வைரஸ்கள் நமது உடலில் உருவாவதைக் கட்டுப்படுத்த முடியும். இம்மருந்தானது உருமாற்றமடைந்த புதிய வகை கொரோனாவையும் கட்டுப்படுத்துகிறது.

மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது இம்மருந்தானது மிகவும் தீவிர பாதிப்பு கொண்ட கொரோனா நோயாளிகளுக்குக் கொடுக்கப்படாது. அதேபோல கொரோனா நோயாளியின் ஆக்சிஜன் அளவு மிக மிக குறைவாக இருந்தாலும் இச்சிகிச்சை முறை ஒத்துழைக்காது. வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில் கொரோனா தொற்று ஏற்பட்ட முதல் 7 நாட்களுக்குள் இம்மருந்தைச் செலுத்திக்கொண்டால் கொரோனாவின் தீவிரத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நம்மால் தப்பிக்க முடியும்.

கொரோனாவை முளையிலேயே கிள்ளி எறியும் சிகிச்சை முறை தான் இது. இதனால் நாட்டில் பெருமளவு கொரோனா உயிரிழப்புகள் கட்டுப்படுத்தப்படும். இம்மருந்தை ஆரம்பத்திலேயே எடுத்துக்கொண்டால் நோயாளிகள் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருந்தால் போதுமானது” என்றார். அதிக பாதிப்பு கொண்ட கொரோனா நோயாளிகளுக்கு இம்முறை பரிந்துரைப்படவில்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.