ஜிஎஸ்டியில் 12%, 28% வரி விகிதங்களை நீக்க நிதியமைச்சர்கள் கூட்டத்தில் ஒப்புதல்
ஜிஎஸ்டியில் 12%, 28% வரி விகிதங்களை நீக்க நிதியமைச்சர்கள் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி கட்டமைப்பில் உத்தேசிக்கப் பட்டுள்ள சீர்திருத்தங்கள் குறித்து, மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் நேற்று புதுடெல்லியி்ல், மாநில அமைச்சர்கள் அடங்கிய குழுவுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில் புதிய ஜிஎஸ்டி மாற்றங்கள் மக்களை தன்னிறைவு பெற்றவர்களாக மாற்றும் என்றும், சிறுகுறு தொழில்துறைகள் ஏற்றம் பெறும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளார். முன்னதாக ஜிஎஸ்டி சீர்திருத்தம் செய்யப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில், ஜிஎஸ்டியில் 12%, 28% வரி விகிதங்களை நீக்க நிதியமைச்சர்கள் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதிநவீன சொகுசு கார்களுக்கு 40% ஜிஎஸ்டி வரி விதிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “செஸ் இழப்பீடு, ஆரோக்கியம் மற்றும் ஆயுள் காப்பீடு குறித்து அமைக்கப்பட்ட ஜி எஸ் டி கவுன்சிலின் அமைச்சர்கள் கூட்டத்தில், தற்சார்பு இந்தியாவை நோக்கிய பயணத்தில் அடுத்த தலைமுறை ஜி எஸ் டி சீர்திருத்தங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. அடுத்த தலைமுறை ஜி எஸ் டி சீர்திருத்தம், சாமானியர்கள், சிறு- குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிவாரணம் அளிக்கும். எளிமைப்படுத்தப்பட்ட வெளிப்படையான மற்றும் வளர்ச்சி சார்ந்த வரி ஆட்சியை உறுதி செய்யும். கட்டமைப்பு சீர்திருத்தம், விகித பகுத்தறிவு, வாழ்க்கை எளிமை ஆகிய 3 தூண்களை அடிப்படையாக கொண்டது” என பேசினார்.