×

"புனித நீர் போதும்; மருத்துவமனை வேண்டாம்" - மூடநம்பிக்கையால் பறிபோன சிறுமியின் உயிர்!

 

மூடநம்பிக்கைகள் இந்தியாவை பீடித்திருக்கும் நோய். அனைத்து மதங்களிலும் இருக்கும் மூடநம்பிக்கைகள் இருக்கின்றன. இதனைப் பயன்படுத்திக் கொண்டு மக்களின் அறியாமையின் மூலம் சிலர் காசும் பார்க்கின்றனர். காசோடு நின்றுவிட்டாலும் பரவாயில்லை; மக்களின் உயிரையும் காவு வாங்கிவிடுவது தான் வேதனையின் உச்சக்கட்டம். கடந்த சில மாதங்களாகவே இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. குறிப்பாக மருத்துவமனைக்கு சென்றாலே குணமடையும் நோய்களுக்கு மத ரீதியாக குணப்படுத்துவதாக கூறி உயிரையும் எடுத்துவிடுகின்றனர்.

இதுபோன்றதொரு சம்பவம் தான் கேரள மாநிலத்தில் அரங்கேறியிருக்கிறது. கண்ணூரைச் சேர்ந்தவர் அப்துல் சத்தார். இவருக்கு 11 வயதி மகள் இருந்தார். அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்குச் செல்லாத சத்தார், மகளை அங்குள்ள மசூதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். மசூதியில் மதகுருவாக இருக்கும் இமாம் முகமது உவைஸ் என்பவர் சிறுமிக்கு "புனித நீர்” என சொல்லி மந்திரித்த நீரை கொடுத்து குடிக்க வைத்துள்ளார். இனி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டாம்; புனித நீர் குடித்ததால் சரியாகிவிடும் என்றும் இமாம் கூறியிருக்கிறார்.

இதனால்  காய்ச்சல் அதிகமாகிய போதும் சத்தார் தனது மகளை மருத்துவமனைக்கே அழைத்துச் செல்லாமல் வீட்டிலேயே இருக்க வைத்துள்ளார். ஆனால் நிலைமை கைமீற சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சத்தாரின் சகோதரர் காவல் துறையில் இதுதொடர்பாக புகாரளித்துள்ளார். இதன்பேரில் சத்தார், இமாம் உவைஸ் ஆகியோரை கைது செய்தனர். இதுகுறித்து கண்ணூர் மாவட்ட எஸ்.பி. இளங்கோ கூறுகையில், “மூடநம்பிக்கை காரணமாக சிறுமிக்கு சிகிச்சை அளிக்காமல் இருந்துள்ளனர். இதன் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். இமாம் தவறான வழிநடத்துதலால் ஏற்கெனவே 4 பேர் மருத்துவ சிகிச்சை பெறாமலேயே உயிரிழந்துள்ளனர்” என்றார்.