×

"போராட்டம் வாபஸ் இல்லை; நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்வோம்” 

 

உழவர் பெருங்குடி மக்களின் ஓராண்டு கால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்தது. போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி போராட்டக்களத்திலிருந்து திரும்பிச் செல்லுமாறு அவர்களிடம் கோரிக்கை வைத்தார். பிரதமர் மோடியின் இந்த முடிவுக்கு ஒட்டுமொத்த விவசாய அமைப்புகளும் வரவேற்பு தெரிவித்தன. இருப்பினும் முழுவதுமாக ரத்துசெய்யும் வரை போராட்டத்தைக் கைவிடுவதாக இல்லை என அறிவித்துள்ளனர்.

 ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது. ஆனால், இன்று வரை அது செயல்படுத்தப்படவில்லை. அதேபோல இந்த அறிவிப்பும் நீர்த்துபோகாது என்பதற்கு என்ன உத்தரவாதம் என விவசாயிகள் கேள்வி கேட்கின்றனர். அதேபோல குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்படுதல், சர்ச்சைக்குரிய மின் மசோதா ஆகிய பிரச்சினைகளுக்கான தீர்வு இன்னும் எட்டப்படவில்லை என்பதால் போராட்டத்தைக் கைவிட விவசாயிகள் மறுத்துள்ளனர்.

பிரதமரின் அறிவிப்புக்கு முன்பாகவே விவசாய அமைப்புகள் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் நவம்பர் 29ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் பேரணி செல்ல திட்டமிட்டிருந்தனர். அதேபோல நவம்பர் 22ஆம் தேதி லக்னோவில் மகாபஞ்சாயத்தை நடத்தப்படும் எனவும் அறிவித்திருந்தனர். தற்போது வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதால் டிராக்டர் பேரணி நிறுத்தப்படுமா என விவசாய அமைப்புகளிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர்கள் நிச்சயமாக இல்லை; சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும்; எங்களுடைய மற்ற பிரச்சினைகளுக்கும் முடிவு தெரிய வேண்டும்; ஆகவே திட்டமிட்டபடி பேரணி நடைபெறும் என்றனர்,