வேட்டியுடன் வந்த விவசாயியை ஷாப்பிங் மாலுக்குள் விட மறுத்த காவலாளி
வேட்டியுடன் வந்த விவசாயியை ஷாப்பிங் மாலுக்குள் விட மறுத்த காவலாளியின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு நகரில் உள்ள பிரபலமான மால்களில் ஒன்றான ஜிடி மாலுக்கு நேற்று மாலை விவசாயி ஒருவர் வேஷ்டி அணிந்தவாறு தனது மகனை அழைத்துக் கொண்டு படம் பார்க்க சென்றுள்ளார். கையில் படம் பார்க்க டிக்கெட் இருந்த நிலையில் அவர் உள்ளே நுழைந்தபோது மாலின் காவலாளி அவரை தடுத்து நிறுத்தியுள்ளார். படம் பார்க்க டிக்கெட் இருந்த போதிலும் விவசாயி வேஷ்டி அணிந்திருந்த காரணத்தினால் அவரை உள்ளே விட முடியாது என்று காவலாளி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக விவசாயி காவலாளியிடம் படம் பார்க்க செல்ல அனுமதி கோரி உள்ளார்.
காவலாளி மற்றும் அவருடன் இருந்தவர்கள் திட்டவட்டமாக அவரை உள்ளே விட அனுமதிக்காத நிலையில் தனக்கு நேர்ந்த விபரீதத்தை வீடியோ எடுத்து மகன் மூலமாக அதை சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். இந்த வீடியோ வைரலாகிய நிலையில் மாலின் நடவடிக்கையை பலரும் கண்டித்துள்ளனர். இதற்கிடையே இன்று காலை மாலின் காவலாளி தனது செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார். இந்த நிகழ்வை கண்டித்து இன்று கன்னட அமைப்புினர்கள் நூற்றுக்கணக்கானோர் மாலின் முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாலுக்கு எதிராகவும் இந்த செயலுக்கு எதிராகவும் போராட்டத்தின் போது கண்டனம் முழக்கங்கள் பதிவு செய்யப்பட்டது. கன்னட அமைப்புகளின் போராட்டம் காரணமாக அப்பகுதி முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.