×

ஆந்திராவில் ருத்ர தாண்டவமாகும் கள்ளநோட்டு புழக்கம்- ரூ.45 லட்சம் பறிமுதல்

 

அல்லூரி சீதாராமராஜு மாவட்டம்  சிந்தூர், வி.ஆர்.புரம் மண்டலங்களில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட கும்பலை வி.ஆர்.புரம் போலீசார் கைது செய்தனர்.  

தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் பல்வஞ்சாவைச் சேர்ந்த பொதிலி முரளி, ஜங்கம் ஸ்ரீனிவாஸ், கட்டாரி சம்ராஜ்யம், கவுடு கொல்ல கிரண் குமார், வெமுலா புல்லாராவ், கொனகல்லா சிட்டிபாபு, பொதிலி ஸ்ரீநிவாஸ், பக்கனாட்டி நாகேஸ்வரராவ், குறளுலெட்டி உமேஷ் சந்திரா ஆகியோர் எளிதில் பணம் சம்பாதிக்க கூட்டாக சேர்ந்தனர். 

இதற்காக கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட முடிவு செய்து கம்ப்யூட்டர், பிரிண்டர் ஆகியவை வாங்கி கொண்டு பல்வஞ்சாவில் உள்ள பொதிலி முரளி என்பவரது வீட்டில் கள்ள நோட்டுகளை அச்சடித்தனர். கிரண் குமார் கள்ள நோட்டுகளை அச்சிடுவதற்கு தேவையான முதலீடுகளை வழங்கினார்.  ஜங்கம் ஸ்ரீனிவாஸ், கோணகல்ல சிட்டிபாபு, வெமுலா புல்லாராவ் ஆகியோர் போலி நோட்டுகளை அச்சடித்து வந்தனர். 

பத்ராசலம், எடப்பாக்கா, சிந்தூர், வி.ஆர்.புரம் குந்தா ஆகிய கிராமங்களில் அச்சடிக்கப்பட்ட போலி நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. ஒரு லட்சம் ரூபாய் கள்ளநோட்டுக்கு கிரண்குமார் அசல் பத்தாயிரம் ரூபாய் வழங்கி வந்தார். இந்த பணத்தை பெட்ரோல் நிலையங்கள், மளிகைக் கடைகள், ஓட்டல்களில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் புழக்கத்தில் விட்டு வந்தனர். இந்த நோட்டுகளை  இரவில்  மாற்றிக் கொள்வது வழக்கமாக கொண்டுள்ளனர். 

இந்நிலையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வி.ஆர்.புரத்தில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட  கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ள  நோட்டுகள், மூன்று பிரிண்டர்கள், ஒரு கம்ப்யூட்டர், ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன என எஸ்.பி. சதீஷ்குமார் தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆதரப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.