×

"ஒமைக்ரான் டம்மி பீஸா?... தப்பு கணக்கு போடாதீங்க" - இந்த புது டேட்டாவ பாருங்க!

 

இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதேபோல தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் 2 லட்சத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. ஏற்கெனவே கட்டுப்பாட்டில் இருந்த டெல்டாவை ஒமைக்ரான் உசுப்பிவிட்டுள்ளது. இதனால் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து தாண்டவமாடுகிறது டெல்டா. டெல்டாவும் ஒமைக்ரானும் ஒருசேர பரவுவதால் தொற்று எண்ணிக்கை மளமளவென எகிறிக் கொண்டிருக்கிறது. ப்படியே போனால் இன்னும் சில தினங்களில் தினசரி 5 லட்சத்திற்கும் அதிகமான பாதிப்பு ஏற்படலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

எண்ணிக்கையைக் கண்டு அதிர்ந்துபோனாலும் ஒமைக்ரான் அவ்வளவாக பெரிய பாதிப்பை உண்டாக்குவதில்லை என சொல்லப்படுகிறது. முதன்முதலில் கண்டறியப்பட்ட தென்னாப்பிரிக்காவில் மற்ற கொரோனா அலைகளை விட ஒமைக்ரானால் ஏற்பட்ட அலை பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர், ஆக்சிஜன் தேவைப்படுவோர் விகிதங்கள் மிகக் குறைவாகவே இருந்தது என அந்நாட்டு நிபுணர்கள் கூறினர். அபாயகரமான டெல்டாவை விட வேகமாகப் பரவினாலும், 2 டோஸ் போட்டுக்கொண்டவர்களை தாக்கினாலும் 3 நாட்களில் ஓடி விடுகிறது ஒமைக்ரான். 

இவை எல்லாம் முதற்கட்ட தகவல்கள்தான். ஆனால் மகாராஷ்டிரா, பஞ்சாப் மாநிலங்களிலிருந்து வெளியாகியிருக்கும் புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியை தருகின்றன. ஆம் மகாராஷ்டிராவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களில் 96% பேருக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. பஞ்சாப்பில் ஆக்சிஜன் தேவைப்படுவோரின் எண்ணிக்கையும் சரசரவென உயர்ந்து வருகிறது. இதில் உள்ள ஒற்றுமை என்னவெனில் அனைவருமே தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள். தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு ஒமைக்ரான் தீவிர பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஆனால் ஒமைக்ரானை அனைவரும் லேசானதாக கருதி அலட்சியமாக இருக்கின்றனர். குறிப்பாக 1 டோஸ் போட்டுவிட்டு 2ஆம் டோஸ் போடுவதில்லை. சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதில்லை. மாஸ்க் அணிவதில்லை. இவ்வாறு எதையும் கடைப்பிடிக்காமல் தடுப்பூசியும் செலுத்திக்கொள்ளாமல் இருந்தால் ஒமைக்ரானால் உங்களுக்கு ஆபத்து அதிகரிக்கலாம். ஆகவே அனைவரும் 2 டோஸ் தடுப்பூசிகளையும் முழுவதுமாக செலுத்திக்கொள்ள வேண்டுமென நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். கொரோனா பரவல் முடியும் வரை அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றவும் வலியுறுத்தியுள்ளனர்.