×

இந்தியாவை 3ஆவது அலை தாக்குமா? - என்ன சொல்கிறார்கள் நிபுணர்கள்?

 

கொரோனா முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலை தான் இந்தியாவை சற்று உலுக்கி பார்த்தது. ஆக்சிஜன் தட்டுப்பாடு, போதுமான படுக்கை வசதி இல்லாமை என இந்திய மக்கள் அல்லல்பட்டனர். ஆகவே அடுத்த அலை வருவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டின. அதேபோல தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுப்படுத்தின. குறிப்பாக அக்டோபர், நவம்பர் மாதங்கள் பண்டிகை மாதங்கள் என்பதால் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என எச்சரித்திருந்தன.

ஏனென்றால் இம்மாதிரியான பண்டிகைக் காலங்களில் தான் புதிய அலை உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனை முன்வைத்து பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாட்டை அதிகப்படுத்தின. பண்டிகைக் காலம் என்றாலும் கூட தொற்று எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. இதனால் மூன்றாம் அலை கண்ணுக்கெட்டிய தூரம் தெரியவில்லை. அதேபோல தற்போது தினசரி கொரோனா தொற்றும் குறைந்த வண்ணமே இருக்கிறது. நாட்டில் பதிவாகும் கொரோனா பாதிப்பில் 60% கேரளாவில் மட்டுமே பதிவாகின்றன.

பல்வேறு மாநிலங்களில் இரட்டை இலக்கத்திலேயே தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 7 ஆயிரத்து 579 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த 543 நாட்களில் இல்லாத அளவில் மிகவும் குறைவான பாதிப்பாகும். இதுதொடர்பாக அசோகோ பல்கலைக்கழக பேராசிரியர் கௌதம் மேனன் கூறுகையில், "2ஆவது அலையின்போது நாட்டில் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தனர். இதன் காரணமாக  இயற்கையாகவே மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி  அதிகரித்துள்ளது. 

தவிர கொரோனா தொற்று ஏற்படாதவர்களுக்கு தடுப்பூசியால் நோய் எதிர்ப்புச் சக்தி உயர்ந்துள்ளது. இவையனைத்தாலும் கொரோனா வைரஸின் வீரியம் சற்று குறைந்துள்ளதாக தெரிகிறது. ஆகவே இந்தியாவில்  மூன்றாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இல்லை. இருப்பினும் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில் வைரஸ்களை புரிந்துகொள்ள முடியாது. எப்போது வேண்டுமானாலும் மீண்டும் தாக்கலாம். வரும் டிசம்பர் முதல் அடுத்தாண்டு பிப்ரவரிக்குள் மூன்றாவது அலை பாதிப்பு ஏற்படலாம்” என்றார்.