மேகமலை ஆக்கிரமிப்புகளை அகற்றியே தீர வேண்டும்- உச்சநீதிமன்றம்
மேகமலை புலிகள் சரணாலய ஆக்கிரமிப்புகள் & இலவம்பஞ்சு தோட்டங்களை முழுமையாக அப்புறப்படுத்துங்கள், ஆக்கிரமிப்பைக் கட்டுப்படுத்த துணை ராணுவப் படையை அனுப்ப நேரிடும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேகமலை புலிகள் சரணாலய பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரத்தில் எந்த ஒரு சலுகையும் காட்டக்கூடாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது. மேகமலை விவகாரம் நீதிபதி விக்ரம்நாத், “மேகமலை ஆக்கிரமிப்புகளை அகற்றியே தீர வேண்டும். மேகமலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியவில்லை என்றால் துணை ராணுவத்தை அனுப்ப நேரிடும். மேகமலை புலிகள் சரணாலயம் பகுதிகளை ஆக்கிரமித்துள்ள இலவம் பஞ்சு தோட்டங்களை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது என தமிழ்நாடு அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த நீதிபதி, பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் உள்ள விடுதிகளை முழுவதுமாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும். இலவம்பஞ்சு பயிரிடப்பட்டுள்ள அந்த நிலங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட வேண்டும். இலவம் பஞ்சு தோட்டங்களில் பணிபுரிவதற்காக வருபவர்கள் தான் மேகமலையில் குடியேறுகின்றனர். நிலங்களை ஆக்கிரமித்துள்ள யாராக இருந்தாலும் கட்டிடங்களுக்கான மின்சாரம், நீர் இணைப்பு துண்டிக்கப்பட வேண்டும். ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக செப்டம்பர் 8ம் தேதிக்குள் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டார்.