நிலநடுக்கத்தால் நேபாளத்தில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதா?- அதிர்ச்சியூட்டும் தகவல்கள்
நேபாளத்தில் திபெத் எல்லைப் பகுதியிலிருந்து பாயும் போட்டே கோசி ஆற்றில் திடீரென ஏற்பட்ட பேரழிவு வெள்ளப்பெருக்கு, அந்த பகுதியை முழுமையாக பாதித்துள்ளது.
நேபாளத்தில் காட்டாற்று வெள்ளம் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நேபாளம் சீனா எல்லையில் இன்று காலை 8.00 மணியளவில் 4.4 ரிக்டர் அளவுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியது தெரியவந்துள்ளது.திபெத்தில் தொடங்கி நேபாளத்தின் போட்டே கோசி ஆற்றில் சீறிப் பாய்ந்த வெள்ளம், கற்பனை செய்து பார்க்க முடியாத பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் இயங்கி வந்த 13 முக்கிய நீர்மின் திட்டங்கள் வெள்ள நீரில் மூழ்கிப் பலத்த சேதமடைந்துள்ளன. சீனாவுடனான முக்கிய 2 வர்த்தக எல்லைக் கடப்புப் பாதைகள் முற்றிலும் சேதமடைந்து மூடப்பட்டுள்ளன.எல்லைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் மற்றும் வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
பெரும் நிலைகுலைவைச் சந்தித்துள்ள நேபாளத்திற்கு உதவ இந்தியாவும் சீனாவும் முன்வந்துள்ளன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் உடனடியாக இணையுமாறு உள்ளூர் மற்றும் சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு நேபாள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. வெள்ளம் சீனாவிலிருந்து தொடங்கியதாக நேபாளம் கூறுகிறது. ஆனால், சீன அரசு ஊடகங்களோ இச்சம்பவத்தை நேபாளத்தில் உருவான ஒரு "சேறு சரிவு" (mudslide) என்று விவரிக்கின்றன.