×

காற்று மாசால் திணறும் தலைநகர்... முழு ஊரடங்கை அமல்படுத்த தயாராகும் அரசு!

 

இந்தியாவின் தலைநகர் டெல்லி காற்று மாசுடன் கடந்த சில ஆண்டுகளாகவே போராடி வருகிறது. மக்கள் வீடுகளுக்குள் கூட முகக்கவசம் அணிந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போதோ நிலைமை மிக மோசமான நிலைக்குச் சென்றுள்ளது. காற்று மாசு அறிக்கையில், டெல்லியில் காற்றின் தரம் ஆபத்தான நிலைக்குச் சென்று கொண்டிருப்பதாகவும் அடுத்த 1 வாரத்திற்கு நிலைமை மேலும் மோசமடையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. காற்று மாசைக் கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதனிடையே ஹரியானா, பஞ்சாப் மாநிலத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு வயல்களில் இருக்கும் கழிவுகளை அகற்ற இயந்திரங்களை வழங்க உத்தரவிடக் கோரி சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆதித்யா துபே, சட்டக்கல்லூரி மாணவர் அமான் பங்கா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் கடந்த சனிக்கிழமை விசாரிக்கப்பட்டது. அப்போது தலைமை நீதிபதி, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். 

டெல்லியில் காற்றின் தரத்தை உயர்த்த 2 நாட்கள் ஊரடங்கு கொண்டுவருவது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனக் கூறிய அவர், உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என்று டெல்லி அரசுக்கும் மத்திய அரசுக்கும் உத்தரவிட்டார். ஊரடங்கு குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் ஆணையிட்டார். அந்த வகையில் டெல்லி அரசு, இன்று தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், "காற்று மாசை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை பிறப்பிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.  அதன் முன்னேற்படாக இந்த வாரம் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் எதுவும் நடத்தப்படாது. 

அனைத்தும் ஆன்லைன் வழியாகவே நடைபெறும். அதேபோல அரசு அதிகாரிகள் வீட்டிலிருந்து வேலை செய்வார்கள். தனியார் அலுவலகங்களும் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம். கட்டுமானப் பணிகள் மூன்று நாட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.  எனினும் ஹரியானா, பஞ்சாப் எல்லையிலுள்ள டெல்லியைச் சேர்ந்த பகுதிகளிலும் முழு ஊரடங்கு பிறப்பிக்க மத்திய அரசு முன்வர வேண்டும். அப்போது தான் டெல்லி அரசின் நடவடிக்கைக்கு முழுப் பலன் கிடைக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.