×

மறு உத்தரவு வரும்வரை பள்ளிகளில் நேரடி வகுப்புகளும் ரத்து!

 

இந்திய தலைநகர் டெல்லியை மிக மோசமான காற்று மாசு தாக்கி வருகிறது. மக்களின் அன்றாட வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. வீடுகளுக்குள் கூட மக்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. தற்போது பனிக்காலம் வேறு நெருங்கிவருவதால், பனிக்காற்றோடு சேர்ந்து மாசு துகள்கள் கலந்து புகை மண்டலமாகக் காட்சியளிக்கின்றன. இதனால் டெல்லி அபாய கட்டத்தில் இருக்கிறது. காற்று மாசைக் கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதனிடையே காற்று தர மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையில் டெல்லியின் சுற்றுச்சூழல் இந்த வாரம் நிலைமை மேலும் மோசமடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையைச் சுட்டிக்காட்டி டெல்லியில் காற்றின் தரத்தை உயர்த்த 2 நாட்கள் முழு ஊரடங்கு கொண்டுவருவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என தலைமை நீதிபதி என்.வி.ரமணா உத்தரவிட்டார். அதன்படி டெல்லி அரசு முழு ஊரடங்கைப் பிறப்பித்தது. அரசு ஊழியர்கள் அனைவருக்கும் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். 

தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கும் இதே நடைமுறை தான். அதேபோல அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி. மற்ற வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்டுமான வேலைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அனைத்து கல்வி நிறுவனங்களும் கால வரையின்றி மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் வழியாகவே வகுப்புகள் நடைபெறும். தற்போது டெல்லி கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மறு உத்தரவு வரும் வரை நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.