×

“தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் பல உயிர்களை இழக்க நேரிடும்” – மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் எச்சரிக்கை!

கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் என்னவென்பதை இந்தியாவிற்கே உணர்த்தியது டெல்லி மாநிலம் தான். கடந்த மாதம் ஆரம்பத்திலிருந்தே உக்கிரமாகப் பரவி வந்தது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் பலர் செத்து மடிந்தனர். இறந்தவர்களை அடக்கம் செய்யக் கூட முடியாத நிலையே ஏற்பட்டிருந்தது. மயானங்களில் பிணங்கள் வரிசை கட்டி நின்றன. நிலைமை கைமீறி சென்றதை உணர்ந்த மாநில அரசு ஏப்ரல் 19ஆம் தேதி முழு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது. அதன்பிறகு படிபடியாக கொரோனா பாதிப்பு குறைந்ததால், மீண்டும் மீண்டும் முழு
 

கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் என்னவென்பதை இந்தியாவிற்கே உணர்த்தியது டெல்லி மாநிலம் தான். கடந்த மாதம் ஆரம்பத்திலிருந்தே உக்கிரமாகப் பரவி வந்தது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் பலர் செத்து மடிந்தனர். இறந்தவர்களை அடக்கம் செய்யக் கூட முடியாத நிலையே ஏற்பட்டிருந்தது. மயானங்களில் பிணங்கள் வரிசை கட்டி நின்றன. நிலைமை கைமீறி சென்றதை உணர்ந்த மாநில அரசு ஏப்ரல் 19ஆம் தேதி முழு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது.

அதன்பிறகு படிபடியாக கொரோனா பாதிப்பு குறைந்ததால், மீண்டும் மீண்டும் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. தற்போது அங்கு கொரோனா பாதிப்பு 1,500க்கும் குறைவாகவே பதிவாகியுள்ளது. இருப்பினும் ஊரடங்கால் கிடைத்த பலனை தளர்வளித்து கெடுத்துவிடக் கூடாது என்பதில் அம்மாநில அரசு தெளிவாக இருந்தது. அதன்படி மே 31ஆம் தேதி ஊரடங்கை நீட்டித்தது. அதற்குப் பிறகும் கொரோனா பாதிப்பு குறைந்துகொண்டே சென்றால் தளர்வுகள் குறித்து முடிவெடுக்கப்படும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார்.

கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தற்காலிக தீர்வு தான்; அனைவருக்கும் தடுப்பூசி போடுவதே நீண்ட கால தீர்வாக அமையுமென மருத்துவ வல்லுநர்கள் கூறியிருக்கிறார்கள். அதனடிப்படையில் 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியைத் துரிதப்படுத்த டெல்லி அரசு முடிவெடுத்துள்ளது. உள்நாட்டு நிறுவனங்களிடம் தடுப்பூசி கிடைக்காததாலும், மத்திய அரசின் ஒதுக்கீடு போதிய அளவு இல்லாததாலும் சர்வதேச நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள முன்வந்தது. அதற்காக மாடர்னா, பைசர் ஆகிய நிறுவனங்களுடன் பேசியது.ஆனால் அந்நிறுவனங்களோ நாங்கள் மத்திய அரசிடம் தான் டீல் பேசுவோம்; உங்களுக்கு தர மாட்டோம் என திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.

இதன் காரணமாக தடுப்பூசி செலுத்தும் பணி மந்தமாக நகர்கிறது. இதுதொடர்பாகப் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “டெல்லி அரசிடம் தற்போது ஒரு தடுப்பூசி கூட கையிருப்பில் இல்லை. இதனால் 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி மையங்கள் நான்கு நாட்களுக்கு மூடப்படுகிறது. இது மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டிய காலக்கட்டம். தடுப்பூசி வழங்குவது மத்திய அரசின் தார்மீக பொறுப்பு. இனி தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் பல உயிர்களை நாம் இழக்க நேரிடும்.

மத்திய அரசு ஏன் தடுப்பூசிகளை வாங்குவதில்லை. ஒருவேளை பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவை தாக்கினால் அவர்களை எதிர்க்க ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு ஆயுதங்களை வாங்க வேண்டுமா என்ன? ஆகவே மத்திய அரசு பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.