×

"அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடல்; ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே வேலை"

 

இந்தியாவின் தலைநகர் டெல்லி காற்று மாசுடன் கடந்த சில ஆண்டுகளாகவே போராடி வருகிறது. மக்கள் வீடுகளுக்குள் கூட முகக்கவசம் அணிந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போதோ நிலைமை மிக மோசமான நிலைக்குச் சென்றுள்ளது. ஏனென்றால் பனிக்காலம் ஆரம்பித்துள்ளது. பனிக்காலத்தில் காற்றில் மாசுத் துகள்கள் கலந்து அபாய கட்டத்தில் இருக்கிறது. காற்று மாசைக் கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதனிடையே காற்று தர மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையில் டெல்லியின் சுற்றுச்சூழல் அடுத்த 1 வாரத்திற்கு நிலைமை மேலும் மோசமடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையைச் சுட்டிக்காட்டி வழக்கு ஒன்றில் டெல்லி அரசு வழக்கறிஞரிடமும் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலிடமும் சரமாரியாக கேள்வியெழுப்பியது. டெல்லியில் காற்றின் தரத்தை உயர்த்த 2 நாட்கள் முழு ஊரடங்கு கொண்டுவருவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என தலைமை நீதிபதி என்.வி.ரமணா உத்தரவிட்டார். 

இதற்கு பதில் மனு தாக்கல் செய்த டெல்லி அரசு, காற்று மாசை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை பிறப்பிக்க நாங்கள் தயாராக இருப்பதாகக் கூறியது. இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை (நவ.21) வரை அனைத்துப் கல்வி நிறுவனங்களையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் அனைவருக்கும் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கும் இதே நடைமுறை தான். அதேபோல அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி. மற்ற வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கட்டுமான வேலைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பத்து ஆண்டுகளுக்கும் மேலான டீசல் வாகனங்கள், 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்களின் பட்டியலை போக்குவரத்து துறை காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளது. அவர்கள் இது குறித்து நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் அந்த வாகனங்களின் நடமாட்டம் நிறுத்தப்படும் என்றும் அரசு கூறியுள்ளது. பொதுப் போக்குவரத்தில் இயற்கை எரிவாயுவால் இயங்கும் பேருந்துகளை இயக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.