×

"நோ வின்டர் லீவ்... உடனே திரும்பி வாங்க" - டாக்டர்களுக்கு வேட்டு வைத்த ஒமைக்ரான்!

 

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. பெரும்பாலான மாநிலங்களில் ஒரே வாரத்தில் மும்மடங்காக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அபாயகரமான டெல்டாவும் அதை விட உக்கிரமாகப் பரவக்கூடிய ஒமைக்ரானும் ஒருசேர இணைந்து பரவி வருவதே இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டிவிட்டது. கொரோனா பரவல் விகிதம் (பாசிட்டிவிட்டி) 6.46% ஆக உயர்ந்துள்ளது. கடந்த மே 18ஆம் தேதிக்குப் பின்னர் இந்த விகிதமும், புதிய கேஸ்களும் அதிகமாகி இருக்கின்றன.

தொடர்ந்து 2 நாட்களுக்கு 5 சதவீதத்திற்கும் அதிகமாக பாசிட்டிவிட்டி ரேட் பதிவானால் அது சிவப்பு நிற (ரெட் அலர்ட்) அபாயத்தைக் குறிக்கும். இதன் பொருள் முழு ஊரடங்கை பிறப்பிக்க வேண்டும் என்பதாகும். இதன் காரணமாகவே டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம், வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். அதேபோல அத்தியாவசிய தேவைகளின்றி மக்கள் வெளியில் நடமாடக் கூடாது.

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், மருத்துவமனை படுகைகளும் நிரம்பி வருகின்றன. குறிப்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 2 நாட்களில் 50க்கும் மேற்பட்டொர் கொரோனா தொற்று ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த அவசர நிலை காரணமாக எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு நாளை முதல் ஜன. 10ஆம் தேதி வரையிலான குளிர்கால விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள், ஊழியர்கள் அனைவரும் உடனே பணிக்கு திரும்பவும் மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.