×

"குன்னூரில் நடந்தது என்ன? எங்கே உடல் அடக்கம்" - அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை தாக்கல்!

 

இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரியான முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் நீலகிரி ஹெலிகாப்டர் விபத்தில் அகால மரணமடைந்தார். அவருடன் பயணித்த மனைவி மதுலிக்காவும் உயிரிழந்தார். நாட்டில் மிகப்பெரிய சம்பவம் நிகழ்ந்திருப்பதால் தலைநகர் டெல்லி பரபரப்பாகியுள்ளது. இந்தச் செய்தி கிடைத்த உடனே பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிபின் ராவத்தின் இல்லத்திற்குச் சென்று அவருடைய மகளைச் சந்தித்து ஆறுதல் கூறினார். 

அதேபோல விமானப் படை தளபதி விபத்து குறித்து அறிக்கையளிக்கவும் உத்தரவிட்டார். மேலும் நேற்று மாலை 6.30 மணியளவில் பிரதமர் தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் விபத்து குறித்தும், அடுத்த முப்படை தலைமை தளபதியாக யாரை நியமிக்கலாம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இச்சூழலில் இன்று அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை தாக்கல் செய்வார் என சொல்லப்பட்டது.

அதன்படி இன்று காலை நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதும், பிபின் ராவத் மறைவுக்கு இரு அவைகளிலும் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதற்குப் பின் ராஜ்நாத் சிங் அறிக்கையை வாசித்தார். அப்போது பேசிய அவர், "சூலூரிலிருந்து காலை 11.48 மணிக்கு ஹெலிகாப்டர் புறப்பட்டது. நண்பகல் 12.15 மணிக்கு தரையிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 12.08 மணிக்கு ஹெலிகாப்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதற்குப் பின் குன்னூர் அருகே விபத்துக்குள்ளானது. உடனே மீட்புப் படையினர் அங்கு சென்றனர்.

அவர்கள் விரைந்து உடல்களை மீட்டனர். பயணம் செய்த 14 பேரில் 13 பேர் மரணமடைந்தனர். உயிர் பிழைத்த வருண் சிங்கிற்கு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைவரது உடல்கள் இன்று மாலை டெல்லிக்கு எடுத்துவரப்பட உள்ளன. பிபின் ராவத் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி மரியாதை செலுத்தப்படும். மற்ற வீரர்களுக்கும் உரிய ராணுவ மரியாதை வழங்கி உடல் நல்லடக்கம் செய்யப்படும். இந்த விபத்து தொடர்பாக முப்படைகளின் விசாரணைக்கு விமானப் படை உத்தரவிட்டுள்ளது. ஏர்மார்ஷல் மன்வேந்திரா சிங் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.