×

அதிர்ச்சி...! பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கொரோனா பாசிட்டிவ்

 

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் உச்சமடைந்துள்ளது. இரண்டாம் அலையின் ஆரம்பத்தில் என்ன வேகத்தில் கொரோனா பரவியதோ அதை விட இரண்டு மடங்கு வேகமாக பரவி வருகிறது. அதற்குக் காரணம் மின்னல் வேக ஒமைக்ரான் பரவல் தான். அதனுடன் டெல்டா வேரியன்டும் சேர்ந்துகொண்டதால் பாதிப்பு எண்ணிக்கை மலைக்க வைக்க கூடிய அளவிற்கு அதிகரித்துள்ளது. 2ஆம் அலையின்போது சினிமா நடிகர்கள், கிரிக்கெட்டர்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் என பிரபலமான நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது.

தற்போது அதேபோல பிரபலமான நபர்களுக்கு கொரோனா என்ற செய்தி அடிக்கடி வட்டமடிக்கின்றன. மகாராஷ்டிராவில் 20 எம்எல்ஏக்கள் 10 அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. கடந்த டிசம்பர் 6ஆம் தேதி மத்திய உள்துறை இணை அமைச்சரான நித்யானந்த் ராய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. 


இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், "எனக்கு கொரோனா தொடர்பான லேசான அறிகுறிகள் தென்பட்டன. உடனே நான் கொரோனா பரிசோதனை மேற்கொண்டேன். முடிவில் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கிறேன். சமீபத்தில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.