×

சட்டென்று உயரும் கொரோனா கேஸ்கள்... பூஸ்டர் டோஸுக்கு அனுமதி? 

 

கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் எப்படி இருந்தது என அனைவருமே அறிவர். அதற்குக் காரணம் உருமாறிய டெல்டா கொரோனா தான். பிரிட்டன், அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில் 3ஆம் அலை உருவாகவும் இதுவே காரணம். இந்த வைரஸ் சாதாரண கொரோனா வைரஸை விட 50% வேகமாகப் பரவக் கூடியது. உயிரிழப்பை ஏற்படுத்த கூடியது. குறிப்பாக இப்போது இருக்கும் தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாது. இந்த வைரஸ் மருத்துவத் துறைக்கு சவாலாக மாறியுள்ளது. 

இதேபோன்று சக்திவாய்ந்த உருமாறிய கொரோனா வைரஸ்கள் வருங்காலங்களில் உருவாகலாம். இவற்றைக் கட்டுப்படுத்த இப்போதுள்ள தடுப்பூசிகளிடம் செயல்திறன் போதுமானதாக இல்லை. இப்போது வரும் அனைத்து தடுப்பூசிகளிலுமே மொத்தம் இரு டோஸ்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆகவே தான் பூஸ்டர் டோஸ் எனப்படும் மூன்றாம் முறையாக அதே தடுப்பூசியை எடுத்துக்கொள்ள அமெரிக்கா போன்ற நாடுகள் பரிந்துரைத்துள்ளன. அங்கு பெரும்பாலானோர் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொண்டனர். 

இதன் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. உருமாறிய வைரஸ்களை எதிர்கொள்ள பூஸ்டர் டோஸ் அவசியமான ஒன்றாக மாறியிருக்கிறது. ஆனால் இந்தியாவில் இரண்டு டோஸ் போடுவதே பெரும் பாடாக இருக்கிறது. இந்தியாவில் மொத்தமாக 115 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் 38 கோடி பேர் மட்டுமே முழுவதுமாக தடுப்பூசி செலுத்தியுள்ளார்கள். 76 கோடி பேர் ஒரு டோஸ் மட்டுமே போட்டுள்ளார்கள். முதல் டோஸ் போட்டவர்கள், 2ஆம் டோஸ் போடுவதில் ஆர்வம் காட்டுவதே இல்லை. இது அரசுகளுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இச்சூழலில் பூஸ்டர் எனப்படும் மூன்றாவது டோஸ் போடுவதற்கான விவாதம் எழுந்துள்ளது. அதேபோல ராஜஸ்தானில் சில மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இதனைக் கருத்தில்கொண்டு அம்மாநில முதல்வர் அசோக் கெலாட், பூஸ்டர் டோஸ் போட மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதனைக் கருத்தில்கொண்டு நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு இம்மாத இறுதிக்குள் பூஸ்டர் டோஸ் குறித்து அறிவிப்பு வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. தடுப்பூசி கையிருப்பு, அதன் செயல்திறன், உற்பத்தி ஆகியவற்றின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும்.