×

நகைக்கடைக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்திய பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை! பட்டப்பகலில் அரங்கேறிய கொடுமை

 

தெலங்கானா மாநிலம் கரீம்நகரில் பட்டப்பகலில் துப்பாக்கியால்  சூட்டு நகைக்கடையில் பெரும் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


தெலங்கானா மாநிலம் கரீம்நகரில் பி.எம்.ஜெ எனும் ஜுவல்லரி நகைக்கடை உள்ளது. இங்கு வழக்கம்போல் காலை சுமார் 10 மணியளவில்,  ஊழியர்கள் கடையைத் திறந்து, லாக்கர்களில் இருந்து நகைகளை வெளியே எடுத்து டிஸ்ப்ளே ராக்குகளில் வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது, ​​இரண்டு பைக்குகளில் வந்த ஐந்து மர்ம நபர்கள், கடைக்குள் நுழைந்தனர். அவர்களைத் தடுக்க முயன்ற கடை ஊழியர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஊழியர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் , மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். 

இதைத் தொடர்ந்து, மர்ம நபர்கள் கடையில் இருந்த மதிப்புமிக்க நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். மர்ம நபர்கள் மொத்தம் 30 சுற்றுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிசிடிவி கேமிரா காட்சிகள் சேகரித்து கைரேகை நிபுணர்கள்  வரவழைக்கப்பட்டு, ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்து வருகின்றனர். காயமடைந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பட்டப்பகலில், அதுவும் மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியில் நடந்த இந்தக் கொள்ளைச் சம்பவம், கரீம்நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருடப்பட்ட நகைகளின் சரியான மதிப்பு குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். கொள்ளை கும்பல் தப்பி சென்ற வழித்தடத்தில் உள்ள கேமிரா காட்சிகளையும் துள்ளியமாக ஆய்வு செய்து எவ்வாறு தப்பினார்கள் என்று ஆய்வு செய்து வருகின்றனர். இந்தக் கொள்ளைக்குப் பின்னால்  வெளிமாநிலக் கும்பல் இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.  முதலில் அவர்கள் நோட்டமிட்டு  பின்னர்  தாக்குதல் நடத்தினார்களா அல்லது நேரடியாக வந்து கொள்ளையடித்தார்களா?  கொள்ளைக் கும்பலுக்கு உள்ளூர்வாசிகள் யாரேனும் உதவினார்களா என்பது போன்ற பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.