×

5 மாநிலங்களில் தேர்தல் எப்போது? - இன்று தேதி அறிவிப்பு!

 

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைகளில் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதில் பஞ்சாப் தவிர்த்து மற்ற மாநிலங்களில் பாஜக தான் ஆளுங்கட்சி. இதில் உத்தரப் பிரதேச தேர்தல் தான் முக்கியவத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டு பிரதமர் தேர்தலுக்கான ஒத்திகையாக தான் உபி தேர்தல் அமையவுள்ளது. மக்களின் மனதை அறியும் தேர்தலாகவும் உள்ளது. ஆகவே விரைவில் தேர்தல் நடத்தும் கட்டாயத்தில் இருக்கிறது பாஜக. இச்சூழலில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தேர்தல் நடக்குமா என்ற ஐயம் எழுந்தது.

இதனை தெளிவுப்படுத்த இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள், மத்திய சுகாதாரத் துறை, உள்துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்திற்குப் பிறகு கடும் கட்டுப்பாடுகளுடன் ஐந்து மாநிலங்களிலும் திட்டமிட்டபடி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதேபோல தேர்தல் நடத்தும் மாநிலங்களில், அந்தந்த அரசுகள் மக்களுக்கு விரைந்து தடுப்பூசி செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டது. அதேபோல பிரசாரத்தின்போது, அரசியல் கட்சிகள் பேரணி, பொதுக்கூட்டங்களை தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

இதையொட்டி பாதுகாப்பு பணிகளுக்காக துணை ராணுவத்தினர் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு செல்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. முதல்கட்டமாக துணை ராணுவமான மத்திய ஆயுத போலீஸ் படையை சேர்ந்த 225 கம்பெனி படைகள் பல்வேறு கட்டங்களாக உத்தரப்பிரதேசத்திற்கு செல்லவுள்ளன. மேலும் தேர்தலுக்கான பணிகள் சூடுபிடித்துள்ளன. இச்சூழலில் ஐந்து மாநிலங்களில் எந்த தேதியில் தேர்தல் நடக்கும், தேர்தலில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள், எவ்வாறு பிரச்சாரம் செய்வது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை இன்று பிற்பகல் தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது.