ஒடிசா, மேற்குவங்கத்தில் கோரதாண்டவம் ஆடிச்சென்ற டானா புயல்..
ஒடிசா, மேற்குவங்கம் மாநிலங்களில் கோர தாண்டவம் ஆடி டானா புயல் இன்று அதிகாலை தீவிர புயலாக கரையை கடந்தது.
மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் அக்.21ம் தேதி காலை 5.30 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக உருவான இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முந்தினம் காலை (23ஆம் தேதி) மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற்றறு. ‘டானா’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப்புயல் 24-ஆம் தேதி (நேற்று) காலை தீவிர புயலாக வலுப்பெற்றது.
இது, வடக்கு ஒரிசா – மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில், பூரி - சாகர் தீவுகளுக்கு இடையே நேற்று இரவு கரையைக் கடக்க தொடங்கியது. இந்த புயல் காரணமாக ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் பலத்த சூறை காற்றுடன் கன மழை பெய்தது. டானா புயல் ஒடிசா கடற்கரையை நெருங்கியதும், மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் சூரியகாற்று வீசியதால் மரங்கள் , மின்கம்பங்கள் சாய்ந்தன. வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. பல்வேறு பகுதிகளில் பெரிய மரங்கள் சாய்ந்துள்ள நிலையில் அதனை அகற்றும் பணியில் தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தீவிர புயலாக நள்ளிரவு முதல் இன்று (25 ஆம் தேதி) அதிகாலை வரை 5 மணிநேரம் கரையைக் கடந்த டானா புயல், இருமாநிலங்களையும் புரட்டிப்போட்டுள்ளது. ஒடிசாவில் மட்டும் 14 மாவட்டங்கள் உருக்குலைந்து போயுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 6 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் பெருமளவில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக மாநில முதலமைச்சர் மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார்.
புயல் கரையை கடந்தாலும் பத்ரக், பாலசோர், ஜபல்பூர் ஆகிய 14 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேபோல் டானா புயலால் மேற்குவங்க மாநிலத்தின் கடலோர மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் இருந்து சுமார் 2 லட்சம் பேர் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இன் நிலையில் புயல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த புவனேஸ்வர் மற்றும் கொல்கத்தா சர்வதேச விமான நிலையங்களில் காலை 8 மணி முதல் விமான போக்குவரத்து தொடங்கியுள்ளது.