×

ஊரடங்கால் வந்த வினை... குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் 261% உயர்வு - வெளியான ஷாக் டேட்டா!

 

தொழில்நுட்பங்கள் அபரிமிதமான வளர்ச்சியை எட்டியுள்ளன. உலகம் கைக்குள் சுருங்கிவிட்டதுல். ஸ்மார்ட் வாட்ச் மூலம் இருக்கும் இடத்தில் இருந்தே ஃபேன் போட முடிகிறது. குறிப்பாக பெரும்பாலான மனித உழைப்புகள் குறைந்துள்ளன. அனைத்தையும் தொழில்நுட்ப சாதனங்களே பார்த்துக் கொள்கின்றன. இதெல்லாம் நல்ல வளர்ச்சி தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இதனால் ஏற்படும் விளைவுகளும் அதிகமாக இருக்கிறது. அது தான் ஆன்லைன் அல்லது சைபர் குற்றங்கள். கொரோனா வந்த பிறகு அது பன்மடங்கு உயர்ந்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் அதிகப்படியான ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகின. அதிகப்படியான குற்றங்களும் உயர்ந்தன. அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் உயர்ந்துள்ளன. ஆம் முன்பை விட சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளது என்பது தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி தெரியவந்துள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த 2020ஆம் ஆண்டில் பதிவான குழந்தைகளுக்கு எதிரான இணையவழி குற்றங்கள் தொடர்பான புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் நாடு முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான இணையவழி குற்றங்கள் 261 சதவீதம் அதிகரித்துள்ளது. இது தான் பெரும் மலைப்பாக உள்ளது. அச்சப்படவும் வைத்துள்ளது. 261 சதவீதம் என்றால் சாதாராண எண்ணிக்கை அல்ல. இதுதொடர்பாக 116 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவர் மட்டும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 207 வழக்குகள் பதிவாகியுள்ளன. 2019ஆம் ஆண்டில் 70 வழக்குகள் பதிவாகின. 2019ஆம் ஆண்டில் முதலிடத்தில் இருந்த உத்தரப்பிரதேசம் தற்போது 197 வழக்குகளுடன் 2ஆம் இடத்தில் உள்ளது. 

கர்நாடகாவில் 144, கேரளாவில் 126, ஒடிசாவில் 71, ஆந்திராவில் 52 வழக்குகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டில் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் பதிவாகியுள்ளன. ஊரடங்கு காலத்தில் இணையதளங்களை குழந்தைகள் பார்ப்பது அதிகரித்துள்ளது. அத்துடன், குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்களும் அதிக அளவில் உருவாகி உள்ளன. பெரும்பாலான வீடியோக்கள் குழந்தைகளின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களுக்கு தெரிந்த உறவினர்களே பதிவு செய்துள்ளனர். குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.