கோடிக்கணக்கானோர் குவிவார்கள்; போராட்டம் தொடரும் - கரப்பான் பூச்சி கட்சி
தர்மேந்திர பிரதான் பதவி விலகவில்லை என்றால் எங்கள் போராட்டம் தொடரும். இன்னும் வீரியம் அடையும் என கரப்பான் பூச்சி கட்சி செயற்பாட்டாளர் சவுரவ் தாஸ் கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கரப்பான் பூச்சி கட்சி செயற்பாட்டாளர் சவுரவ் தாஸ், “தர்மேந்திர பிரதான் பதவி விலகவில்லை என்றால் எங்கள் போராட்டம் தொடரும். இன்னும் வீரியம் அடையும். எங்கள் போராட்டத்திற்கு எதிராக முதல்நாள் முதலே எதிர்மறையாக கருத்தாக்கங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. எங்களுக்கு வெளிநாட்டு நிதி வருவதாகவும், ஜார்ஜ் சோரோஸ் நிதி கொடுப்பதாகவும் நிறைய சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த பரப்புரைகள் எதுவும் எங்களை நிறுத்தாது. இந்தப் போராட்டம் உண்மைக்கானது. கல்வி அமைப்பு மோசமாக இருப்பதற்கான உண்மை தரவுகள் இருக்கின்றன” என்றார்.
இதேபோல் கரப்பான் ஜனதா கட்சி செய்தித்தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா கூறுகையில், “நாங்கள் திரும்பி போக மாட்டோம். இனி அமைதியாகவும் இருக்க மாட்டோம். ஜூலை 20-ம் தேதி போலீஸ் எங்களை எப்படி நடத்தினார்கள் என்பதை கண்கூடாக பார்த்தோம் நாங்கள் எந்த எஃப்.ஐ.ஆர் பார்த்தும் பயப்பட மாட்டோம்; எங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால் கோடிக்கணக்கானவர்கள் டெல்லியில் குவிவார்கள்” என்றார்.