×

மணிஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் ஜூன் 02ம் தேதி வரை நீட்டிப்பு!

 

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை அடுத்த மாதம் 02ம் தேதி வரை நீட்டித்து டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த நிலையில், ஆம் ஆத்மி அரசு மீது பாஜக அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது.  டெல்லியில் மதுபான கொள்கையை தளர்த்தி ரூ.1000 கோடி வரை ஊழல் செய்ததாக குற்றம் சாட்டிய நிலையில், துணை முதலமைச்சராக இருந்த மணிஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி சிபிஐ கைது செய்தது. இதேபோல் டெல்லி மதுபான கொள்கையில் நடந்த பணமோசடி தொடர்பாக மணிஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறையும் கடந்த மார்ச் 9-ம் தேதி வழக்குப்பதிவு செய்தது. கைது செய்யப்பட்ட மணிஷ் சிசோடியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். மணிஷ் சிசோடியாவை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றன. 

இந்த நிலையில், சிபிஐ தொடர்ந்த ஊழல் வழக்கில் சிசோடியாவின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் அவர் டெல்லியில் உள்ள ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, வழக்கு விசாரணைக்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. சிபிஐ-யின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை ஜூன் 2-ம் தேதிவரை நீடித்து உத்தரவிட்டது.