×

தாய், தந்தை ஆற்றில் குதித்து தற்கொலை- பரிதவித்த 3 வயது குழந்தை

 

ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் சாய் - சிரீஷா தம்பதி கோதாவரி ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேல்புரு கிராமத்தை சேர்ந்தவர்கள் தோட்டா சாய் (29) மற்றும் அவரது மனைவி ஷிரீஷா (28). அந்தத் தம்பதியினர் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் தங்கள் சிறு குழந்தையுடன் ஒரு ஸ்கூட்டரில் பாலத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் குழந்தையை ஸ்கூட்டரிலேயே விட்டுவிட்டு, திடிரென பெருக்கெடுத்து ஓடிய கோதாவரி ஆற்றில் குதித்ததாகக் கூறப்படுகிறது. மூன்று வயதுக் குழந்தை இருட்டிலும் குளிரிலும் பாலத்தில் தனியாக விடப்பட்டிருந்தது. அவ்வழியே சென்றவர்கள் குழந்தை அழுவதைக் கவனித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். 

குழந்தை "அம்மா... அப்பா" என்று கூப்பிடும் சத்தம் கேட்டதும், அப்பகுதி மக்கள் அவனது பெற்றோரைத் தேடத் தொடங்கினர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, குழந்தையைத் தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொண்டு, ஸ்கூட்டரைப் பாதுகாத்தனர். பின்னர் குழந்தை குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், தம்பதியினரைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. கடன் தொல்லையால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானதால் தம்பதி இம்முடிவை எடுத்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.