×

"கங்கனா மீண்டும் திமிர் பேச்சு... பத்ம ஸ்ரீ விருதை திருப்பி வாங்குங்க" - கொதிக்கும் காங்கிரஸ்!

 

பாலிவுட்டைச் சேர்ந்த கங்கனா ரணாவத்தை திரைப்படங்களின் நாயகி என்று சொல்வதைக் காட்டிலும், சர்ச்சைகளின் நாயகி என சொல்வதே சரியாக இருக்கும். இந்தியா பல்வேறு வழிகளில் முன்னேறி வந்துகொண்டிருக்கும் இந்தக் காலக்கட்டத்திலும் ட்விட்டரில் பழமைவாத கருத்துகளைப் பதிவிட்டு வந்தார். குறிப்பாக கொரோனா தடுப்பூசி குறித்தும் கொரோனா குறித்தும் ஆதாரமற்ற போலி பதிவுகளை இட்டு வந்தார். இவரின் அடாவடி தாங்காமல் ட்விட்டரே வெளியே போ என சொல்லாமல் சொல்லி இவரது அக்கவுண்டை முடக்கியது.

அதற்குப் பின் இன்ஸ்டாவில் வலம் வந்தார் அம்மணி. அங்கேயும் அதே கூத்து தான். அவரின் சர்ச்சைக்குரிய பதிவுகளை இன்ஸ்டா அவ்வப்போது நீக்கி வருகிறது. கணக்கை முடக்கவில்லை. கிட்டத்தட்ட கங்கனா ரணாவத் பாஜகவின் அறிவிக்கப்படாத கட்சி சாராத கொள்கை பரப்புச் செயலாளராகவே இருக்கிறார்.  இந்தியாவின் எதிர்க்கட்சி தலைவர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பத்திரிகையாளர்களின் செல்போன்களை ஒட்டுக்கேட்ட விவகாரத்தை அனைவரும் அறிந்திருப்பீர்கள். 

இதன் பின்னணியில் பிரதமர் மோடி இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. அதற்கு கங்கனா சொன்ன விளக்கம் தான் அடடே விளக்கம். அசல் பாஜககாரர்கள் கூட இப்படி யோசித்திருக்க மாட்டார்கள். அதாவது "அந்தக் காலத்தில் ராஜாக்கள் மக்களின் மனதை அறிய ரகசியமாக ஊருக்குள் சென்று ஒட்டு கேட்பார்கள்; மன்னர்களுக்கு அந்த உரிமை உண்டு. நான் செல்போன் ஒட்டுக்கேட்பு குறித்து பேசவில்லை”  என சூசகமாக கூறியிருந்தார். இப்படியே பேசிக்கொண்டிருந்த கங்கனா அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்தார்.

அதில் பேசிய அவர், "பிரிட்டிஷ் ஆட்சியின் தொடர்ச்சி தான் காங்கிரஸ் ஆட்சி. உண்மையில் இந்தியாவுக்கு 2014ஆம் ஆண்டு தான் (பாஜக வந்த பிறகு) உண்மையான சுதந்திரம் கிடைத்துள்ளது. 1947ஆம் ஆண்டு கிடைத்தது பிச்சை தான்’’ என்றார். இதனால் கொதித்தெழுந்த காங்கிரஸ் கட்சியினர் கங்கனாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். "காந்தி, நேரு, வல்லபாய் படேல், பகத் சிங் ஆகியோரை கங்கணா அவமதித்துள்ளார்.  கங்கனா ரணாவத்துக்கு வழங்கப்பட்ட பத்ம விருதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.