×

மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் பங்கேற்கிறார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்! 

 

டெல்லியில் மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்டத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மாலை பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிட்ஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த பயிற்சி பெறும் மைனர் வீராங்கனைகளை  பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவரை கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த வீரர் வீராங்கனைகள் ஏற்கனவே  கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்த  மேரி கோம் தலைமையில் 6  பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. இந்தக் குழுவும் விசாரணை நடத்தி  அறிக்கையை மத்திய அரசிடம் சமர்பித்துவிட்டது.  இந்நிலையில் மீண்டும்  கடந்த 6 நாட்களாக  வீரர் வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரிட்ஜ் பூஷன் பாஜக எம்.பி., என்பதால்  அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்..  ஆனால் அந்த கமிட்டியின் விசாரணை அறிக்கையை விளையாட்டுத்துறை அமைச்சகம் இன்னும் வெளியிடவில்லை.  இந்த சூழலில் மல்யுத்த வீரர் வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் இரவு பகலாக கடந்த 6 நாட்களாக  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
   
இந்நிலையில், இந்த போராட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருகிணைப்பாளர் மற்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மாலை 4 மணிக்கு கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் அவர், மல்யுத்த வீரர், வீராங்கனைகளை நேரில் சந்தித்து பேச உள்ளார். இந்த பயணத்தில் அவருடன் டெல்லி மந்திரி சவுரப் பரத்வாஜ் மற்றும் அதிஷி உள்ளிட்டோரும் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.