×

திரையுலகின் அதிர்ச்சி மரணங்கள் – தவறான உணவுப் பழக்கங்கள் காரணமா ?

தமிழ் திரையுலகின் அதிர்ச்சியூட்டும் மரணமாக அமைந்துள்ளது நடிகர் வடிவேல் பாலாஜியின் திடீர் மரணம். உடல்நலக்குறைவு காரணமாக ஷூட்டிங்கிலேயே மயங்கி விழுந்த அவரை மருத்துவமனையில் சேர்த்த நிலையில், கடந்த 15 நாட்களாக சிகிச்சை அளித்தும் காப்பாற்ற முடியவில்லை. மாரடைப்பு ஏற்பட்டு பக்கவாதம் தாக்கியதாக கூறப்படுகிறது. அவரது மரணம், சின்னத்திரை நட்சத்திரங்களை மட்டுமல்ல, தமிழ் திரை உலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்றாலும், விஜய் டிவி மூலம் தமிழக இல்லங்களில் அவருக்கு ரசிகர்கள் ஏராளம். விஜய்
 

தமிழ் திரையுலகின் அதிர்ச்சியூட்டும் மரணமாக அமைந்துள்ளது நடிகர் வடிவேல் பாலாஜியின் திடீர் மரணம். உடல்நலக்குறைவு காரணமாக ஷூட்டிங்கிலேயே மயங்கி விழுந்த அவரை மருத்துவமனையில் சேர்த்த நிலையில், கடந்த 15 நாட்களாக சிகிச்சை அளித்தும் காப்பாற்ற முடியவில்லை. மாரடைப்பு ஏற்பட்டு பக்கவாதம் தாக்கியதாக கூறப்படுகிறது.


அவரது மரணம், சின்னத்திரை நட்சத்திரங்களை மட்டுமல்ல, தமிழ் திரை உலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்றாலும், விஜய் டிவி மூலம் தமிழக இல்லங்களில் அவருக்கு ரசிகர்கள் ஏராளம். விஜய் டிவியில் மூலம் திரைக்கு வந்த சிவகார்த்திக்கேயன், ரோபோ சங்கர் என முன்னணி நட்சத்திரங்கள் அவரது நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


45 வயதாகும் வடிவேல் பாலாஜியின் திடீர் மரணம் அதிர்ச்சியை மட்டுமல்ல, நட்சத்திரங்களின் உடல் ஆரோக்கியம் குறித்த கேள்வியையும் எழுப்பியுள்ளது. முறையான உணவு பழக்கம், முறையான உடற்பயிற்சி ஆகியவற்றில் திரை நட்சத்திரங்கள் போதிய கவனம் செலுத்தவில்லை என்பதை வடிவேல் பாலாஜியின் மரணம் உணர்த்துவதாக பலரும் தெரிவிக்கின்றனர்.

தவறான உணவுப்பழக்கங்கள்

படப்பிடிப்பு காரணமாக, சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ளாத பழக்கமும், அல்லது ’ஜங் புட்’ போன்ற உணவுப் பழக்கமும் பல விதமாக நோய்களை கொண்டு வந்து விடுகின்றன. பிரியாணி, பிரைட் ரைஸ், கிரில் சிக்கன் என அதிக கொழுப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கப்படும் உணவுகள் அடிக்கடி எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு கெடுதல் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் ஆலோசனையாக உள்ளது.


கூடவே மதுப் பழக்கமும், புகைப் பழக்கமும் சேர்ந்து கொள்வதால் உடல் ஆரோக்கியத்தை தெரிந்தே கெடுத்துக் கொள்கின்றனர். பல நோய்களுக்கு முறையற்ற மதுப் பழக்கமும், புகைப் பழக்கம் போன்றவையே காரணமாக உள்ளன என்கின்றனர் மருத்துவர்கள்.
’ஜங் புட்’ கலாச்சாரம் சின்னத் திரை நட்சத்திரங்கள் மத்தியில் அதிகமாக உள்ளதாக பலரும் கூறுகின்றனர். நேரத்துக்கு சரிவிகித உணவுகளை எடுத்துக் கொள்வதில்லை, ஆனால், எப்போது வேண்டுமானாலும் உடனடி துரித உணவு கிடைப்பதால் நேரங்கெட்ட நேரத்துக்கு சாப்பிடும் போக்கு உள்ளது என்கின்றனர்.

தமிழ் சினிமாவில், இதற்கு முன்னர் அப்படியான ஒரு அதிர்ச்சிகரமான மரணம் பாடலாசிரியர் முத்துக்குமாரின் இறப்பு. தனது கவித் திறமையால், விறுவிறுவென வளர்ந்த முத்துக்குமார், குறுகிய காலத்தில் சுமார் 5 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி புகழ்பெற்றார்.


தனது அற்புதமாக வரிகள் மூலம் தமிழ் திரை இசை ரசிகர்களை கட்டியாண்ட அவர், திடீரென ஒரு நாளில் உயிரிழந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதலில் மஞ்சள்காமாலை நோய் என்றார்கள், பின்னர் அதீத புகைப்பழக்கமும், குடிப்பழக்கமுமே அவரது மரணத்துக்கு காரணமாக இருந்தாக கூறினர் அவருடன் பழகியவர்கள்.
மஞ்சள்காமாலை நோய்க்கு மருத்துவ சிகிச்சை எடுத்து வந்த நிலையிலும், அவர் குடிப்பதை கைவிடவில்லை என்றும் புகைப்பதை கைவிடவில்லை என்று கூறினர்.
அதேபோன்றதொரு மரணம்தான் நடிகர் கலாபவன் மணிக்கும் நேர்ந்தது. சாதாரண நிலையில் இருந்து வளர்ந்த மணி, தனது அபாரமான நடிப்பாற்றலால் மலையான சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்தார். ஆனால் அவரிடமும் அதீத குடிப்பழக்கம் இருந்தது. அந்த குடிப்பழக்கமே அவரது உயிரையும் குடித்தது. அதிக மது அருந்தியதன் காரணமாக மாரடைப்பால் உயிரிழந்தாக கூறப்பட்டது.

ஓய்வில்லாத படப்பிடிப்பு, போதைப்பழக்கம் காரணமாக ஏற்படும் மன அழுத்தம் காரணமாக விபரீத முடிவுகளை தாங்களே ஒருசில நட்சத்திரங்கள் தேடிக்கொள்கின்றனர்.
அதே நேரத்தில், தவறான உணவுப்பழக்கம், உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாமல் இருப்பது போன்ற காரணங்களால் திடீர் மரணங்களும் திரைத்துறையில் தொடர்கிறது. நடிகர் வடிவேல் பாலாஜியின் திடீர் மரணத்தின் மூலம், திரை நட்சத்திரங்கள் உடனடியாக உணர வேண்டிய பாடங்கள் ஏராளம்.

  • தமிழ்தீபன்