இந்தியாவின் ராணுவ நடவடிக்கை வருத்தம் அளிக்கிறது - பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு!
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதை அடுத்து பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் இன்று அதிகாலை பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதேபோல் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தின் போது இந்திய விமானங்களை தாக்க வந்த பாகிஸ்தான் போர் விமானம் ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. தீவிரவாத முகாம்களை நோக்கி இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதை அடுத்து பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சீனா, அனைத்து வகையான பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம். அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் பரந்த நலனுக்காக இரு தரப்பினரும் செயல்பட வேண்டும். நிலைமையை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பாகிஸ்தான் மீதான இந்தியாவின் ராணுவ நடவடிக்கை வருத்தமளிக்கிறது என தெரிவித்துள்ளது.