×

உச்ச நீதிமன்றம் போட்ட போடில் கதிகலங்கிய மத்திய அரசு... அவசர அவசரமாக முடிவு மாற்றம்!

 

நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி (எஸ்எஸ்) தேர்வு என்பது முதுநிலை மருத்துவ மாணவர்களுக்காக நடத்தப்படுவது. இதில் மொத்தமாக 12 சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவுகள் உள்ளன. இவற்றுக்கு அந்தந்த பிரிவுகளிலிருந்தே பெரும்பாலான கேள்விகள் வரும். அனைவருக்கும் பரீட்சயமான பொது மருத்துவ பிரிவிலிருந்து குறைவான கேள்விகளே கேட்கப்படும். இது தான் நீண்ட காலமாகப் பின்பற்றப்படுகிறது. இதே பாடத்திட்டத்தின் அடிப்படையில் இந்தாண்டு ஜூலை மாதம் தேர்வுக்கான அறிவிப்பை தேசிய தேர்வு முகமைகள் (என்டிஏ) வெளியிட்டது. 

அதன்படி நவம்பர் 13,14 ஆகிய தேதிகளில் நீட் எஸ்எஸ் தேர்வுகள் நடைபெறவிருந்தன. இதற்காக மாணவர்கள் அனைவரும் பழைய பாடத்திட்டத்தின்படி தயாராகி வந்தனர். ஆனால் திடீரென்று ஆகஸ்ட் 31ஆம் தேதி மற்றொரு அறிவிப்பை வெளியிட்ட என்டிஏ பழைய பாடத்திட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டதாக தெரிவித்தது. பொது மருத்துவப் பிரிவிலிருந்தே பெரும்பாலான கேள்விகள் எடுக்கப்படும் என்பதே அது. இது ஸ்பெஷலான துறைகளை எடுத்துப் பயிலும் மாணவர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பொது பிரிவில் அனைத்து கேள்விகளும் கேட்டால் மற்ற துறை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

அவ்வாறு பாதிக்கப்படக் கூடிய மாணவர்களில் 41 பேர் உச்ச நீதிமன்றத்தில் இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தனியார் கல்லூரிகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் காலியாக இருப்பதால் தான் பாடத்திட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக கூறினார். இதனால் கடும் ஆத்திரமடைந்த நீதிபதிகள் மத்திய அரசை கிழித்து தொங்கவிட்டனர். மாணவர்களின் நலனை விட தனியார் கல்லூரிகளின் நலன் தான் முக்கியமாக தெரிகிறதா என கேட்ட நீதிபதிகள், மாணவர்கள் ஒன்றும் நீங்கள் உதைத்து விளையாடுவதற்கு கால்பந்து அல்ல என்றனர்.

இந்த பாடத்திட்ட திருத்தங்களை இன்னும் ஒரு வருடத்திற்கு ஒத்திப்போட்டால் ஒன்றும் குடி மூழ்கி போய்விடாது என்பதால் பழைய பாடத்திட்டத்தில் தேர்வை நடத்த வேண்டும் என்றும் ஜனவரியில் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். இதற்கான முடிவை இன்றைக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டனர். அதன்படி இன்று ஆஜரான மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், திருத்தப்பட்ட பாடத்திட்டம் அடுத்த கல்வியாண்டில் (2022-23) இருந்து செயல்படுத்தப்படும் என மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாகக் கூறினார். இந்த வருடம் சொன்ன தேதியில் பழைய பாடத்திட்டத்தில் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.