×

ரூ.2,000 நோட்டுகள் ரத்து செய்யப்பட்டால் ஊழலுக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும் - சந்திர பாபு நாயுடு

 

2,000 ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்பட்டால் ஊழலுக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும் என ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு கூறியுள்ளார். 

நாட்டில் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மட்டும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.  தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகள் படிப்படியாக திரும்ப பெறப்படும் எனவும் அறிவித்துள்ளது. கையில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் தங்கள் கணக்கில் செலுத்திக் கொள்ள ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. அதாவது செப்டம்பர் 30ந் தேதிக்குள் மாற்றிக் கொள்ள மத்திய ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேபோல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு ஒரு நபர் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 
 
இந்நிலையில், 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் முடிவை ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு வரவேற்றுள்ளார். இது குறித்து சந்திரபாபு நாயுடு தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: ஊழல், பதுக்கல் மற்றும் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு மூல காரணமான அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என்று நான் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறேன். இது பொருளாதாரத்தை உயர்த்துவது மட்டுமல்லாமல், மக்களின் பெரிய நன்மைக்காக நேர்மையுடன் உழைக்கும் நேர்மையான நபர்களின் முயற்சிகளுக்கு மிகப்பெரிய மதிப்பையும் சேர்க்கும்.  இந்த நடவடிக்கை வாக்காளர்களிடையே பணப் பட்டுவாடாவை பெரிய அளவில் தடுக்க உதவும். 2,000 ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்பட்டால் ஊழலுக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.