×

"பயோமெட்ரிக் நிறுத்தம்; 50% ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி" - மத்திய அரசு அதிரடி உத்தரவு!

 

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. ஒரே வாரத்தில் மும்மடங்காக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அபாயகரமான டெல்டாவும் அதை விட உக்கிரமாகப் பரவக்கூடிய ஒமைக்ரானும் ஒருசேர இணைந்து பரவி வருவதே இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. டெல்லி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கொரோனா பரவல் விகிதம் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இதனால் மாநில அரசுகள் அரசு அலுவலங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

அந்த வகையில் தற்போது மத்திய அரசு அலுவலங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பிரதமர் அலுவலக விவகாரம் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், "கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, அரசு ஊழியர்களுக்கான பயோ மெட்ரிக் பதிவு நடைமுறை மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை ரத்து செய்யப்படுகிறது. பிரதமர் மோடி அறிவுறுத்தல்படி அரசு ஊழியர்களின் உடல் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ஊழியர்கள் வருகைப் பதிவேட்டில் தங்களுடைய வருகையை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். மேலும், ஊழியர்கள் முழு நேரமும் முகக்கவசம் அணிந்திருத்தல் உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்றுவதை அந்தந்த துறை தலைவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். மேலும் மத்திய அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கும். மீதமுள்ள 50 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவார்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளி பணியாளர்கள் அலுவலகங்களுக்கு வருவதில் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் கொரோனா கட்டுப்பாட்டு மண்டல பகுதிகளில் வசிக்கும் அதிகாரிகள், பணியாளர்களும் அலுவலகங்களுக்கு வருவதிலிருந்து மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. அதேபோல மத்திய அரசு அலுவலகங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூட்டமாக கூடுவதைத் தவிர்க்க அலுவல் நேரங்களில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.