×

"2ஆம் அலை ஞாபகம் இருக்கா?; ஆக்சிஜன் தட்டுப்பாடே இருக்க கூடாது" - மாநிலங்களுக்கு பறந்த உத்தரவு!

 

இந்தியாவை நாடா அல்லது சுடுகாடா என கேட்க வைத்தது கொரோனா இரண்டாம் அலை தான். 2021 ஏப்ரல் மாதம் தொடங்கிய 2ஆம் அலையில் சிக்கி மக்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் சிக்கி சின்னாபின்னமாகினர். தினந்தோறும் பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டியது. உயிரிழப்புகளும் அதிகரிக்க தொடங்கின. ஆக்சிஜன் படுக்கை வசதி கிடைக்காமலும் தடுப்பு மருந்துகள் இல்லாததாலும் மக்களின் அவலக் குரல்கள் காதைக் கிழித்தன. மருந்துகளை வாங்க கால் கடுக்க நீண்ட வரிசையில் காத்திருந்த மக்களின் கொடுமைகளை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

இது ஒருபுறம் என்றால் இறந்தவர்களைப் புதைக்க முடியாதபடி மயானங்களில் பிணங்கள் வரிசை கட்டி நின்றன. இந்தியாவின் ஒட்டுமொத்த மருத்துவக் கட்டமைப்பையே சீர்குலைத்து போட்டிருந்தது கொடூர கொரோனா. மக்களைக் காக்க வேண்டிய மத்திய அரசோ எங்களால் ஒன்றும் செய்ய முடியாது; நாம் அனைவரும் இணைந்தே இரண்டாம் அலையை விரட்ட வேண்டும் என கைவிரித்தது. கையறு நிலையில் நின்ற மக்களுக்கு கொரோனாவின் கருணையைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை. ஒருவழியாக ஜூலையில் கருணை காட்டியது கொரோனா.

மீண்டும் அப்படியொரு நிலை வரக்கூடாது என கங்கணம் கட்டி மாநில அரசுகள் சுகாதார துறையைப் பலப்படுத்தும் வேளையில் இறங்கின. இச்சூழலில் மூன்றாம் அலை அச்சுறுத்தல் ஆரம்பமாகியுள்ளது. இதன் காரணமாக சமீபத்தில் ஆக்சிஜன் கருவிகள், பிஎஸ்ஏ, ஆக்சிஜன் ஆலைகள், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் நிலவரம் மற்றும் கோவிட் மேலாண்மை குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன் காணொலி மூலம் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

கூட்டத்தில் நாட்டில் கொரோனோ பரவல் அதிகரிப்பதை சுட்டிக் காட்டி பேசிய ராஜேஷ் பூஷன், மருத்துவமனைகளில் எந்தவித அவசர சூழலையும் சந்திக்க, அனைத்து வகையான ஆக்சிஜன் சாதனங்களையும் உறுதி செய்ய வேண்டியது மாநில அரசுகளின் முக்கியமான பொறுப்பு என்றார். அதேபோல தினசரி ஆய்வுகள் மூலம், 2ஆவது அவசரகால கோவிட் நடவடிக்கை நிதியை( இசிஆர்பி) மாநில அரசுகள் முழுமையாக பயன்படுத்தி, அதன் செலவின விவரங்களை தேசிய சுகாதார திட்ட பிஎம்எஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.