×

கொரோனா தடுப்பூசி மீதான ஜிஎஸ்டி தள்ளுபடி? – தனியாரில் விலை குறையும் என தகவல்!

கொரோனா இரண்டாம் அலை பரவல் இந்தியாவை மிக மோசமாக தாக்கி வருகிறது. இதனைத் தடுக்க தடுப்பூசி ஒன்றே பேராயுதம் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனால் மே 1ஆம் தேதியிலிருந்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய, மாநில அரசுகள் தொடங்கியுள்ளன. இதற்காக மாநில அரசுகள் தயாரிப்பு நிறுவனங்களிடம் கொரோனா தடுப்பூசிகளை நேரடியாகக் கொள்முதல் செய்யவுள்ளன. தவிர மத்திய அரசும் கொள்முதல் செய்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக தடுப்பூசிகளை அனுப்பிவருகிறது. தனியார் மருத்துவமனைகளும்
 

கொரோனா இரண்டாம் அலை பரவல் இந்தியாவை மிக மோசமாக தாக்கி வருகிறது. இதனைத் தடுக்க தடுப்பூசி ஒன்றே பேராயுதம் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனால் மே 1ஆம் தேதியிலிருந்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய, மாநில அரசுகள் தொடங்கியுள்ளன.

இதற்காக மாநில அரசுகள் தயாரிப்பு நிறுவனங்களிடம் கொரோனா தடுப்பூசிகளை நேரடியாகக் கொள்முதல் செய்யவுள்ளன. தவிர மத்திய அரசும் கொள்முதல் செய்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக தடுப்பூசிகளை அனுப்பிவருகிறது. தனியார் மருத்துவமனைகளும் தடுப்பூசிகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன. இப்போதைக்கு இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் என்ற இரு தடுப்பூசிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கோவிஷீல்டுக்கு மாநில அரசுகளுக்கு 400 ரூபாயாகவும், தனியாருக்கு 600 ரூபாயாகவும் சீரம் நிறுவனம் விலை நிர்ணயம் செய்தது. கடும் எதிர்ப்புக்குப் பின் மாநிலங்களுக்கு 300 ரூபாய்க்கு விற்கப்படும் என்று கூறியது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மாநில அரசுகளுக்கு 600 ரூபாய்க்கும் தனியாருக்கு 1,200 ரூபாய்க்கும் விற்கப்படும் என்று கூறப்பட்டது. மே 1ஆம் தேதிக்குப் பின் தடுப்பூசிக்கு பெரிதளவில் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் விலையைக் குறைக்க நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஆனால் நிறுவனங்கள் குறைப்பதாகத் தெரியவில்லை.

இச்சூழலில் கொரோனா தடுப்பூசி மீதான 5% ஜிஎஸ்டி வரியைக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை நிதி அமைச்சகத்தின் ஜிஎஸ்டி கவுன்சில் விரைவில் வெளியிடும் என்று கூறப்படுகிறது. சில மாநிலங்களில் தடுப்பூசி இலவசம் என்பதால் அதில் பிரச்சினையில்லை. இதன் மூலம் தனியார் மருத்துவமனைகளில் விலை குறையலாம் என்று கூறப்படுகிறது. முன்னதாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்களுக்கு சுங்கவரியை ரத்துசெய்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.