×

இன்று முதல் 24×7 பிரேத பரிசோதனை- மத்திய சுகாதாரத்துறை

 

மருத்துவ கட்டமைப்பு உள்ள மருத்துவமனைகளில் இன்று முதல் சூரிய அஸ்தமனத்திற்கு பின்பும் பிரேத பரிசோதனை நடத்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “உடற்கூராய்வுக்கான வழிமுறைகளில் சில மாற்றங்களை கொண்டுவரப்பட்டுள்ளது. சூரிய அஸ்தமனம் அதாவது இரவு நேரத்திலும் உடற்கூராய்வு நடத்த அனுமதியளிக்கப்படுகிறது.  உடலுறுப்பு தானங்களை அதிகரிக்கும் வகையிலும், உயிரிழந்தவரின் உறவினர்கள் காலவிரயத்தை குறைக்கும் வகையில் இரவு நேர உடற்கூராய்வு ( 24×7 ) அனுமதியளிக்கப்பட்டுள்ளது. உடற்கூராய்வு செய்வதற்கு தேவையான வெளிச்சம், கட்டமைப்பு வசதிகள், தொழில்நுட்பங்கள் என மருத்துவ கட்டமைப்பு வளர்ச்சியடைந்துள்ள நிலையில், இரவு நேர உடற்கூராய்வு முறை என்பது சாத்தியமான ஒன்றாக இருக்கிறது. மருத்துவமனை நிர்வாகங்கள் அதற்கான வசதிகள் உடற்கூராய்வு நடைபெறும் இடங்களில் உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். மேலும், ஒருவர் உயிரிழப்பதற்கு முன்பு உடல் உறுப்பு தானம் வழங்கி இருந்தால், அவர்களுக்கு பிரேத பரிசோதனைக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இரவு நேரங்களில் உடற்கூராய்வு நடைபெறும் போது, முறைகேடுகள் அதாவது உடல் உறுப்பு திருட்டு நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் இரவில் நடக்கும் உடற்கூராய்வு மட்டும் வீடியோ பதிவு செய்ய வேண்டும். பாலியல் சார்ந்த உயிரிழப்பு,தற்கொலை, சிதைந்த உடல்கள் ( அழுகிய நிலை பிணம் ) , சந்தேக மரணம் ஆகியவை தொடர்பான உடல்களை இரவு நேரத்தில் உடற்கூராய்வு கட்டாயம் நடத்தக்கூடாது. இந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. 

இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டவுடன் டுவிட்டரில் பதிவிட்டுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மண்டாவியா, ஆங்கிலேயர் ஆட்சி முடிந்து விட்டதாகவும் பிரதமர் மோடியின் நல்லாட்சியை முன்னெடுத்து செல்லும் வகையில் கட்டமைப்பு வசதிகள் உள்ள மருத்துவமனைகளில் இரவிலும் பிரதேச பரிசோதனை செய்ய மத்திய சுகாதாரத்துறை அனுமதி அளித்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.