×

கர்நாடகாவில் அதிவேகமாக பரவும் புதிய AY 4.2 கொரோனா - தமிழ்நாட்டை நெருங்கிறதா ஆபத்தா?

 

வைரஸ்களின் இயல்பே அடிக்கடி உருமாறுவது தான். அவ்வாறு உருமாறும்போது சில வைரஸ்கள் அதிக வீரியத்துடன் பரவும்; ஆனால் குறைவான தீவிரத்தைக் கொண்டிருக்கும். இன்னும் சில உருமாற்றமடைந்த வைரஸ்கள் குறைவான பரவல் விகிதக்கைக் கொண்டிருக்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். இது இல்லாமல் வேறு சில வகையிலும் வைரஸ்களின் தன்மை இருக்கும். அதற்கு கொரோனா வைரஸும் விதிவிலக்கல்ல. முதலில் தோன்றிய வைரஸை விட உருமாற்றமடைந்த கொரோனா தான் அச்சுறுத்தலாக உள்ளது.

உதாரணமாக ஆல்பா, காமா, கப்பா, டெல்டா என பல்வேறு நாடுகளில் கொரோனா உருமாற்றமடைந்தது. இதில் இந்தியாவில் உருமாறிய டெல்டா வைரஸ் தான் இருப்பதிலேயே கொடூரமானது. ஏனென்றால் சாதாரண கொரோனாவை விட 50% வேகமாகப் பரவக் கூடிய தன்மை கொண்டது. நமது நுரையீரல் செல்களுடன் வலுவான பிணைப்பை ஏற்படுத்தி பெரும் பாதிப்பை ஏற்படுத்தவல்லது. இந்தியாவை இரண்டாம் அலை உலுக்கியதற்குக் காரணமே இந்த டெல்டா தான். டெல்டா கொரோனா பிரிட்டன், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதியாகி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

இச்சூழலில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) சமீபத்தில் அதிர்ச்சியான தகவலை கூறியது. டெல்டாவிலிருந்து உருமாற்றமடைந்த AY 4.2 என்ற உருமாற்றமடைந்த கொரோனா கண்டறியப்பட்டதாக தெரிவித்தது. இந்த வைரஸ் ரஷ்யா, சீனா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் மூன்றாவது அலை பரவலுக்கும் காரணமாக அமைந்துள்ளது. தற்போது இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் பெயரளவுக்கு தான் கட்டுப்பாடுகள் இருப்பதால், இவை உருவாகியிருக்கலாம் என சொல்லப்படுகிறது. முன்பே பண்டிகை காலங்களில் கூட்டம் கூடினால் உருமாற்றமடைந்து வைரஸ்கள் பரவலாம் என ஐசிஎம்ஆர் எச்சரித்திருந்தது. அதுபோலவே இப்போது நடந்தும்விட்டது. 

நாடு முழுவதும் நேற்று முன்தினம் மட்டும் 17 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டது. ஆந்திராவில் 7, கர்நாடகாவில் 2, தெலுங்கானாவில் 2, கேரளாவில் 4, ஜம்மு காஷ்மீர் மற்றும் மகாராஷ்ட்ராவில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் கூறியது. இச்சூழலில் கர்நாடகாவில் பாதிப்பு எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. இதில் மூன்று பேர் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள். நான்கு பேர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். புதிய வைரஸ் பரவுவதால் வெளிநாடுகளிலிருந்து வருவோர் 72 மணி நேரத்திற்கு முன் பெறப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது.