×

மெட்ரோ பாலம் இடிந்துவிழுந்து தாய், மகன் பலி- 8 பேர் மீது வழக்குப்பதிவு

 

பெங்களூரு நகரில் கட்டுமான பணியின்போது மெட்ரோ பாலம் இடிந்து விழுந்து தாய் மற்றும் மகன் உயிரிழந்த விபத்தில் கட்டுமான நிறுவனம் உள்பட 8 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு நகரில் மெட்ரோ கட்டுமான பணி நடந்து வரும் நாகவாரா என்ற பகுதியில் கட்டப்பட்டு வரும் மெட்ரோ பாலம் ஒன்று திடீரென சரிந்து விழுந்தது. அப்போது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கணவன், மனைவி மற்றும் அவர்களது சிறு வயது மகன் மற்றும் மகள் என நான்கு பேர் விபத்தில் சிக்கினர். விபத்தில் காயம் அடைந்த 28 வயதான தேஜஸ்வினி மற்றும் அவரது இரண்டரை வயது மகன் விகான் ஆகியவரும் இருவரும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தனர். 

தேஜஸ்வினி மற்றும் அவரது மகன் உயிரிழப்புக்கு பாஜக கமிஷன் அரசு தான் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில், மெட்ரோ நிறுவனம் சார்பில் 20 லட்சம் மற்றும் முதல்வர் சார்பில் 10 லட்சம் என நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் உயிரிழப்பு தொடர்பாக பெயர் எதுவும் குறிப்பிடாமல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த வழக்கில் கட்டுமான நிறுவனம் உள்ளிட்ட 8 நபர்கள் மீது பெங்களூரு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

மெட்ரோ நிறுவனத்திடம் இருந்து ஒப்பந்தம் பெற்ற நாகார்ஜுனா கட்டுமான நிறுவனம், அந்நிறுவனத்தின் இயக்குநர்கள்  பிரபாகர், சைத்தன்யா, பாதாம், விகாஸ் சிங், நிறுவனத்தின் மேலாளர் லட்சுமிபதி, மெட்ரோ தலைமை பொறியாளர் வெங்கடேஷ் செட்டி, மெட்ரோ நிர்வாக பொறியாளர் மகேஷ் பெந்டேகாரி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர் நிறுவனம் மற்றும் மெட்ரோ பொறியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தாய் மற்றும் மகன் உயிரிழப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர்.